ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் சிறிசேனாவுக்கு ரூ.2.23 கோடி அபராதம்: இலங்கை உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலை தடுக்க தவறியதற்காக முன்னாள் அதிபர் சிறிசேனாவுக்கு ரூ.2.23 கோடி அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினமான ஏப்ரல் 21ம் தேதி பல்வேறு இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. 8 இடங்களில் நடந்த தாக்குதலில் 277  பேர் பலியானார்கள். இதுகுறித்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக உளவுத்துறை எச்சரித்தும், குண்டுவெடிப்பை தடுக்கத்தவறிய அப்போதைய அதிபர் மைத்திரி பால சிறிசேனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இதை இலங்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயந்த் ஜெயசூர்யா தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.

அதில் இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனாவுக்கு ரூ.2.23 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு ரூ.1.12 கோடி , முன்னாள் போலீஸ் இயக்குனர் பூஜித் ஜயசுந்தர,  புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குனர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா ரூ.1.68 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தேசிய புலனாய்வு இயக்குனர் சிசிர மென்டீஸ் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தலா ரூ.23 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த அபராத தொகையை அனைவரும் தங்கள் சொந்த பணத்தில் இருந்து செலுத்த  வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

Related Stories: