ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உதவுவார் என்று நான் நினைக்கிறேன். உண்மையில் நமக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா ஆகிய நாடுகள் போர் தொடுத்துள்ளன. இதனால் ஈரான் அந்த இரண்டு நாடுகளின் ராணுவத்திற்கு எதிராகவும் தீவிரமான தாக்குதலை தொடங்கி உள்ளது. வளைகுடா முழுவதிலும் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது. இதில் வளைகுடா நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மறுபுறும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஈரான், அமெரிக்க நட்பு நாடுகளின் கப்பல்களையும் தாக்கி வருகிறது.
இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க முன்வருமாறு அமெரிக்கா நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது. இதனை அடுத்து ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களை பாதுகாக்க, போர்க் கப்பல்களை அனுப்பும் திட்டம் இல்லை என ஜப்பான், ஆஸ்திரேலியா நேற்று அறிவித்தன.
இதனை தொடர்ந்து ஈரானிடம் இருந்து ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க நட்பு நாடுகள் உதவாவிட்டால், அது NATO அமைப்பின் எதிர்காலத்தை மிக மோசமாக பாதிக்கும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க உதவ முன்வராத நாடுகளை நினைவில் வைத்துக்கொள்வேன் எனவும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். இந்த நிலையில் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உதவுவார் என்று நான் நினைக்கிறேன். உண்மையில் நமக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
