போர் நீடித்தால் 4.5 கோடி பேர் பட்டினி கிடக்க நேரிடும் என ஐநா எச்சரிக்கை.. போரை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என ஈரான் திட்டவட்டம்

நியூயார்க் : அமெரிக்கா மண்டியிடும் வரை போரை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தாப் காமேனி உறுதிப்பட தெரிவித்துள்ளார். ஈரானின் தேசிய பாதுகாப்பு குழு செயலர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், போர் நிறுத்தம் ஒப்பந்தம் அல்லது பதற்றத்தை தனித்தல் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என புதிய ஆட்சியாளரான மொஜ்தாப் காமேனி கூறியுள்ளார். பதற்றத்தை தணிக்க வேண்டும், அமெரிக்காவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என சில நாடுகள் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் முன்மொழிவு ஒன்றை வைத்தது. ஆனால் அமெரிக்கா, இஸ்ரேல் மண்டியிடும் வரை அல்லது தோல்வியை ஒப்புக்கொண்டு இழப்பீடு வழங்கும் வரை போர் தொடரும் என்று மொஜ்தாப் காமேனி கூறியதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே ஐ.நா. அமைப்பின் இணை நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்காவு கூறுகையில், “மத்திய கிழக்கில் தற்போது நடக்கும் போர் ஜூன் மாதம் வரை நீடிக்கும் பட்சத்தில் விலைவாசி உயர்வால் கூடுதலாக 4.50 கோடி பேர் கடுமையான பட்டினிக்கு தள்ளப்படலாம். உலகளவில் பசிக் கொடுமையை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இது இட்டுச்செல்லும். மிகவும் ஒரு மோசமான நிலைமை ஆகும்.ஏற்கனவே போதிய உணவின்றி 31 கோடியே 90 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். போரால், உலகின் சில பகுதிகளுக்கு உயிர்காக்கும் பொருட்கள் அனுப்புவது தாமதமாகி வருகிறது.”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: