பாளை சித்தா கல்லூரியில் பொங்கல் விழா பேப்பரில் ஆடைகள் வடிவமைத்து அசத்திய மாணவிகள்

நெல்லை : பாளை. சித்த மருத்துவ கல்லூரி பொங்கல் விழாவில் மாணவிகள், பேப்பரில் ஆடைகள் வடிவமைத்து, ஒய்யார அணிவகுப்பு நடத்தி அசத்தினர்.

பாளையங்கோட்டை  அரசு சித்த மருத்துவ கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக  கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு சமத்துவ பொங்கல் திருவிழா  நேற்றுமுன்தினம் தொடங்கியது.

கல்லூரி முதல்வர் சாந்தமரியாள் தொடங்கி  வைத்தார். முதல் நாளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று  2வது நாளாகவும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.குறிப்பாக  மாணவிகளுக்கு பேப்பரில் ஆடை அலங்கார போட்டி நடைபெற்றது. இதில் ஒரு  குழுவில் 3 பேர் வீதம் 12 குழுக்கள் இடம் பெற்றன. முதுகலை மற்றும் இளங்கலை  மாணவிகள் பேப்பரை விதவிதமாக ஆடைகளாக வடிவமைத்து அவற்றை அணிந்து கொண்டு  ஒய்யார நடை நடந்து வந்தனர். ஏஞ்சல்,  நர்ஸ், போன்ற ஆடைகளையும் மற்றும் நவீன ஆடைகளையும் பேப்பரில் தத்ரூபமாக  வடிவமைத்து அணிந்து வந்தனர்.

இவர்களுக்கு நடுவர் குழுவினர் மதிப்பெண்கள்  வழங்கினர். இதேபோல் காய்கறிகளில் கலைநயம் மிக்க பொருட்கள் தயாரித்தல்  உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இன்று பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  இரவு கலைநிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.

Related Stories: