வழக்குகள் வாபஸ்: நெடுவாசல் போராட்ட குழு வரவேற்பு

புதுக்கோட்டை:  தமிழக சட்டப்பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.  அப்போது மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய  மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என  அறிவித்தார்.  புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் நடந்தது. இதேபோல் அருகில் உள்ள வடகாடு, நல்லாண்டார்கொல்லை போன்ற இடங்களிலும்  போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர், விவசாயிகள், மாணவர் சங்கத்தினர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டது.  இவ்வழக்குகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதை போராட்ட குழுவினர் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து நெடுவாசல் போராட்டக்குழுவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி கூறுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தினோம். அப்போது 75க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்கும்படி பலமுறை அப்போதை அதிமுக அரசிடம் நேரில் பேச்சுவார்த்தையின்போது கோரிக்கை வைத்தோம். ஆனால் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. தற்போது அனைத்து வழக்குகளையும் ரத்து செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி, பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கூறுகையில், மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக தனியார் எண்ணெய் நிறுவனத்தை கண்டித்து கதிராமங்கலம், நன்னிலம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடத்தினோம்.  இதில் என் மீது உள்பட 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. தற்போது முதல்வர் வழக்குகளை ரத்து செய்துள்ளதால் அதிமுக அரசு சார்பில் போடப்பட்ட வழக்கு ரத்தாகிவிடும். ஓஎன்ஜிசி சார்பில் போடப்பட்ட வழக்குகளும் நீதிமன்றத்தில் தள்ளுபடியாக வாய்ப்புள்ளது. விவசாயிகள் மீது அக்கறைகொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்….

The post வழக்குகள் வாபஸ்: நெடுவாசல் போராட்ட குழு வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: