சடையங்குப்பம் பகுதியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவொற்றியூர்: மணலி சடையங்குப்பம் பகுதியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 16வது வார்டுக்கு உட்பட்ட சடையங்குப்பம் பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில், பொது குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக இங்குள்ள தெரு குழாய்களில் குடிநீர் பழுப்பு நிறத்தில் வருவதோடு துர்நாற்றம் வீசுகிறது.

இதுபற்றி பொதுமக்கள் குடிநீர் வழங்கல் வாரியத்திற்கு புகார் கொடுத்துள்ளனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என கூறப்படுகிறது. இப்பகுதியில் நிலத்தடி நீரை மின் மோட்டார் மூலம் எடுத்து பயன்படுத்துவதற்கு போதிய வசதி இல்லாததால், குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில், தெரு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரை மட்டுமே நம்பி இருப்பதால், வேறு வழியில்லாமல் துர்நாற்றம் கலந்த இந்த குடிநீரையே வடிகட்டி இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், இப்பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தொற்று நோய் வரக்கூடிய அபாயம் உள்ளது.

எனவே, மணலி மண்டல குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள், சுகாதாரமான குடிநீரை பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் மையத்திலிருந்து பைப்லைன் வழியாக இப்பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இவ்வாறு, குடிநீர் வரக்கூடிய பைப்லைன்கள் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. அதனால், அடிக்கடி இதுபோல் குடிநீர் பழுப்பு நிறத்தில் வருவதோடு துர்நாற்றமும் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த பைப்லைனை மாற்றி, புதிய பைப்லை அமைத்து, சுகாதாரமான குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: