பெங்களூருவில் திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் தர்ஷன் மீது செருப்பு வீச்சு; சிவராஜ் குமார், கிச்சா சுதீப் கண்டனம்

பெங்களூரு: பெங்களூருவில் நடந்த திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், பாடகருமான தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னட நடிகர் தர்ஷன் நடித்துள்ள படம், ‘கிராந்தி’.இதை ஹரிகிருஷ்ணா இசை அமைத்து இயக்கியுள்ளார். ரக்‌ஷிதா ராம், ரவிச்சந்திரன், சுமலதா நடித்திருக்கின்றனர். வரும் ஜனவரி 26ம் தேதி திரைக்கு வரும் இந்தப் படம் குறித்து கடந்த வாரம் பேசிய தர்ஷன், அதிர்ஷ்ட தேவதை குறித்து ஆபாசமாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், ஹோசப்பேட்டையில் கடந்த ஞாயிறு அன்று நடந்த இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தர்ஷன் பேசினார். அப்போது பார்வையாளர்கள் பகுதியில் இருந்த ஒரு நபர், திடீரென்று தர்ஷனின் மீது செருப்பு வீசினார். அதிர்ஷ்டவசமாக அச்செருப்பு அவரது தோள்பட்டையில் பட்டு கீழே விழுந்தது. உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று தர்ஷனைப் பாதுகாத்தனர். செருப்பு வீசிய நபரை பிடிக்க, தர்ஷனின் ரசிகர்கள் பார்வையாளர்கள் பகுதிக்கு வந்து தேடினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதற்கு இடையே, தனது ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும் என்று தர்ஷன் வேண்டுகோள் விடுத்தார். மைக் முன்பு நின்று பேசிய அவர், ‘சகோதரா, இது உன்னுடைய தவறு இல்லை’ என்று சாந்தமாக சொன்னார். அவரது பேச்சைப் பொருட் படுத்தாத ரசிகர்கள், செருப்பு வீசிய நபரை உடனே கைது செய்தாக வேண்டும் என்று கோஷமிட்டனர். அப்போது அங்கு வந்த சில போலீசார், செருப்பு வீசிய நபரை பிடித்து அழைத்துச் சென்றனர். இதை தொடர்ந்து விழா மேடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பெங்களூரு போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘கன்னட நடிகர் தர்ஷன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இதனால் ஆவேசம் அடைந்த யாரோ ஒருவர், அவர் மீது செருப்பு வீசியிருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது’ என்றார். இந்த வீடியோவை வெளியிட்டுள்ள கன்னட முன்னணி நடிகர் சிவராஜ் குமார், இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘இதுபோன்ற செயல்களில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம்’ என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும் சில கன்னட நடிகர்களும் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புனித் ராஜ்குமார் ரசிகரா? இந்த நிலையில், தர்ஷன் மீது செருப்பை வீசிய நபர், மறைந்த புனித் ராஜ்குமாரின் ரசிகர் என்று தகவல் வெளியாகியுள்ளது. தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்துக்கு நடிகர் கிச்சா சுதீப் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘அந்த வீடியோவைப் பார்த்து நான் வேதனை அடைந்தேன். அந்த இடத்தில் ஹீரோயின் உள்பட பலர் நின்றிருந்தனர். அவர்களுக்கும், அங்கு நடந்த இச்சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை.

புனித் ரசிகர்களுக் கும், தர்ஷனுக்கும் இடையே எதுவும் சரியில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இதுபோன்ற செயலை புனித் ஆதரித்திருப்பாரா? இதற்கான பதில் புனித் ரசிகர்களுக்கே தெரியும். யாரோ ஒருவர் செய்த இந்த காரியத்துக்காக அன்புக்கும், மரியாதைக்கும் பெயரெடுத்த புனித் ரசிகர்கள் அனைவருடைய நற்பெயரும் கெட்டுவிடக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: