செய்யாறு அடுத்த வட ஆளப்பிறந்தான் கிராமத்தில் விஜயநகர காலத்து அரிய வகை நாககன்னி சிற்பம் கண்டெடுப்பு

செய்யாறு: செய்யாறு அருகே வட ஆளப்பிறந்தான் கிராமத்தில் விஜயநகர காலத்து அரிய வகை நாக கன்னி புடைப்புச்சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அனக்காவூர் ஒன்றியத்தில் வட ஆளப்பிறந்தான் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விநாயகர் கோயில் நிழற்குடை அருகில் பழமையான நாகக்கன்னி புடைப்பு சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிற்பம் குறித்து வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் செல்வகுமார் கூறியதாவது:

கோயில்களில் ஆலமரம், வேப்பமரம், அரசமரம் மற்றும் குளக்கரையில் நாகர்களின் உருவங்களை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம். இந்த வழக்கம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. உயிருள்ள நாகங்கள் புற்றுகளில் இருப்பதாக கருதி அவற்றுக்கு பால் ஊற்றி வழிபடுவதும், விரதம் மேற்கொள்வதும் தற்போதும் பழக்கத்தில் இருந்து வருகிறது. வட ஆளப்பிறந்தான் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட நாககன்னி புடைப்புச் சிற்பம் அரிய வகையானதாகவும், பழமையானதாகவும் உள்ளது. இந்த சிற்பம் விஜயநகர காலத்து வகை எனவும் அறிய முடிகிறது.

நாககன்னி புடைப்பு சிற்பத்தின் உயரம் 77 சென்டி மீட்டர், அகலம் 32 சென்டி மீட்டர் ஆகும். பழமையான இப்புடைப்பு சிற்பத்தில் இரு நாகங்கள் இணைந்து பின்னியபடி உள்ளது. முதல் சுருள் வட்டத்தில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதுபோல் உள்ளது. பாம்புகளின் பிணைப்புகளுக்கிடையில் இரண்டாம் சுருள் வட்டத்தில் நந்தி வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் சுருள் வட்டத்தில் விநாயகர் இடது காலை சற்று நீட்டியபடியும், வலது காலை மடக்கியும் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களோடு காட்சியளிக்கிறார்.

பாம்புகளின் வால் பகுதி கீழ்நோக்கி உள்ளது. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போலவும், அதை அடுத்து நந்தி, விநாயகர் ஒருங்கிணைந்திருப்பது அரிய வகையாக உள்ளது. இந்த அரிய வகை நாகக்கன்னி புடைப்பு சிற்பம் தோண்டி எடுக்கப்பட்டு ஆல மரத்தடியில் வைத்து வழிபட்டு வந்த நிலையில் புதிதாக கோயில் எழுப்ப உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: