கத்தியை காட்டி பணம் பறித்த பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் 4 பேர் கைது

திருவண்ணாமலை: புதுச்சேரி மாநிலம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் வைரச்செல்வம்(45). இவருக்கு சொந்தமான லாரியை விழுப்புரம் மாவட்டம் கெடார் கிராமத்தை சேர்ந்த குபேந்திரன் என்பவர் ஓட்டி வருகிறார். கடந்த 17ம்தேதி மாலை குபேந்திரன், கடலூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் இருந்து லாரியில் பொருட்களை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை வழியாக கோவாவுக்கு புறப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த வயலூர் கூட்ரோட்டில் நள்ளிரவில் வந்தபோது அவரது லாரி பஞ்சரானது. லாரியை நிறுத்திவிட்டு செல்போனில் பஞ்சர் கடைக்கு தொடர்பு கொண்டார். அப்போது 2 பைக்கில் வந்த 4 பேர், குபேந்திரனை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

ஆனால் குபேந்திரன் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 4பேரும் குபேந்திரனை மீண்டும் தாக்கி சட்டைப் பாக்கெட்டில் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து குபேந்திரன், வேட்டவலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் ராஜன்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்(21), மணிகண்டன்(19) மற்றும் 17, 15 வயதுள்ள 2 சிறுவர்கள் என்பதும், இவர்களில் பிரகாஷ்,

மணிகண்டன் இருவரும் பாலிடெக்னிக்கில் படித்து வருவதும், 17, 15 வயதுடைய சிறுவர்கள் ஐடிஐ படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். பிரகாஷ், மணிகண்டன் ஆகியோரை வேலூர் சிறையிலும், 17, 15 வயதுள்ள ஐடிஐ மாணவர்களை கடலூரில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர்.

Related Stories: