மீண்டும் குப்பை கொட்டும் இடமாக மாறி வரும் பல்லாவரம் பெரிய ஏரி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பல்லாவரம்: பல்லாவரம் ரேடியல் சாலையில் அமைந்துள்ள பல்லாவரம் பெரிய ஏரி சுமார் 200 ஏக்கர் பரப்பளவு உடையது. பரந்து, விரிந்து கடல்போல் காட்சியளித்த இந்த பல்லாவரம் பெரிய ஏரி, ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கி தற்போது சுமார் 50 ஏக்கர் பரப்பளவிற்கும் குறைந்த அளவிலேயே காட்சியளிக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் இந்த ஏரியை ஆக்கிரமிக்கும் பொருட்டு, சமூக விரோதிகள் சிலர் அதில் குப்பைகள் மற்றும் கழிவுநீரை கலந்து ஏரியை மாசுபடுத்தி வந்தனர்.

இதனால், இந்த பல்லாவரம் பெரிய ஏரியை பாதுகாப்பதன் அவசியம் குறித்து சமூக ஆர்வலர்கள் அரசுக்கு தெரியப்படுத்தினர். அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு பல லட்சம் செலவு செய்து, அரசு இந்த பல்லாவரம் பெரிய ஏரியை சுத்தப்படுத்தி, அதன் கரைகளை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டது. அத்துடன் பல்லாவரம் ரேடியல் சாலையை ஒட்டியுள்ள ஏரியின் கரையில் யாரும் அத்துமீறி உள்ளே நுழைந்து, குப்பைகள் கொட்டாதவாறு, நெடுஞ்சாலை துறை சார்பில் இரும்பு தகடுகள் கொண்டு தடுப்புகளும் அமைக்கப்பட்டது.

மேலும், ஏரி சுத்தமானதுடன், ஏரியில் குப்பைகள் கொட்டுவதும் தடுக்கப்பட்டது. இதன், காரணமாக சமீபத்தில் மாண்டஸ் புயலால் சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஏரியில் அதிகப்படியான மழைநீர் நிறைந்து, தற்போது ஏரி பார்ப்பதற்கே ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில், சமீப நாட்களாக பல்லாவரம் பெரிய ஏரியில் அத்துமீறி நுழையும் சமூக விரோதிகள் சிலர், மீண்டும் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டி, ஏரியை பாழ்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘பல்வேறு ஆக்கிரமிப்புகளால் ஏற்கனவே பல்லாவரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்த நட்டேரி, அன்னேரி மற்றும் ஜதேரி உள்ளிட்ட பல ஏரிகள் இன்று காணாமல் போய், அவை இருந்த இடத்தில் ஏராளமான குடியிருப்புகள் முளைத்துள்ளன.‌ அவற்றில் ஓரளவேனும் தப்பியது இந்த பல்லாவரம் பெரிய ஏரி, கீழ்க்கட்டளை ஏரி உள்ளிட்ட ஒரு சில ஏரிகள் தான்.  அவையும் கூட இன்று தங்களது தன்மைகளை இழந்து பார்ப்பதற்கே பரிதாபகரமாகத்தான் காட்சியளிக்கிறது. 1980களில் இந்தப் பகுதி மக்கள் தங்களது விவசாய நிலங்களில் நெல், கம்பு ஆகியவற்றை விவசாயம் செய்யவும், தங்களது குடிநீர் தேவைகளுக்காகவும் இந்த ஏரிகளையே பெரிதும் நம்பி இருந்தனர்.

இதனால், பல்லாவரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் எப்பொழுதும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்படும். ஆனால், தற்போது நாம் நீர் வளத்தை காக்க தவறியதன் விளைவாக, குழாய்களில் பத்து நாளைக்கு ஒரு முறை வரும் பாலாற்று தண்ணீரையோ அல்லது லாரி தண்ணீரையோ தான் நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலை மாற வேண்டும். தற்போது தமிழக அரசு நீரின் அவசியம் மற்றும் அத்தியாவசியம் குறித்து அறிந்து, அதனை காக்க, நீர் நிலைகளை பாதுகாக்க பல்வேறு நல்ல திட்டங்களை வகுத்து வருகிறது. அதனால்தான் சமீபத்தில் சென்னையில் பெருமழை பெய்த போதும் கூட, சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்காமல் அவை நீர்நிலைகளை எளிதில் சென்றடைந்தது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் மட்டும் இதற்கு சற்று விதிவிலக்காக, பல்லாவரம் ஏரியை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் விரைவிலேயே, பல்லாவரம் பெரிய ஏரி மீண்டும் குப்பை கிடங்காக மாறும். அதற்கு முன் இந்த ஏரியில் குப்பைகளை கொட்டி, நீர்நிலைகளை மட்டுமல்ல சுற்றுப்புறத்திற்கும் சீர்கேடு ஏற்படுத்தும் சமூக விரோதிகள் மீது அபராதம், சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், பல்லாவரம் பெரிய ஏரியை சுற்றியுள்ள பகுதியில் குப்பைகளை கொட்டுவதை தடுக்கும் பொருட்டு எச்சரிக்கை பதாகைகள் வைத்து, நீர் வளத்தை காப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே, இனி வருங்காலங்களில் நீர்நிலைகள் பாழ்படுத்துவது தடுக்கப்படுவதுடன், ஏரி, குளங்கள் அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றப்படும். இதனால் அந்த ஏரி, குளங்களை சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும். மக்களின் தண்ணீர் போராட்டத்திற்கும் ஒரு நிரந்தர தீர்வாக அமையும்,’’ என்றனர்.

Related Stories: