உலக கோப்பை கால்பந்து 2022: சுவிசை சுருட்டிய போர்ச்சுகல்: 21 வயது ராமோஸ் ஹாட்ரிக் சாதனை

தோஹா: உலக கோப்பை கால்பந்து தொடரின் ‘ரவுண்டு ஆப் 16’ல் சுவிட்சர்லாந்து அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போர்ச்சுகல் அணி 16 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிக்கு முன்னேறியது. லுசெய்ல் அரங்கில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றின் கடைசி போட்டியில் போர்ச்சுகல் (9வது ரேங்க்) - சுவிட்சர்லாந்து (15வது ரேங்க்) அணிகள் மோதின. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் சுவிஸ் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், சைக்கிள் கேப்பில் போர்ச்சுகலின் 21 வயது இளம் வீரர் கொன்சாலோ ராமோஸ் (17வது நிமிடம்), பெப்பே (33வது நிமிடம்) கோல் அடித்து அந்த அணிக்கு முன்னிலை கொடுத்தனர்.

இடைவேளையின்போது போர்ச்சுகல் 2-0 என முன்னிலை வகித்தது. முதல் பாதியில் கேப்டனும் நட்சத்திர வீரருமான  கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறக்கப்படாததால், கெப்லர் லாவரன் என்கிற பெப்பே தான் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 2வது பாதியில் சுவிஸ் வேகம் குறைந்து தள்ளாட, போர்ச்சுகல்  ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. 51வது நிமிடத்தில் ராமோஸ்  தனது 2வது கோலடித்து அசத்தினார். 55வது நிமிடத்தில் ரஃபேல் குயெரெர்ரோ  தன் பங்குக்கு ஒரு கோல் அடிக்க, போர்ச்சுகல் 4-0 என வலுவான முன்னிலையைப் பெற்றது. சுவிஸ் தரப்பில் மேனுவல் அகாஞ்சி 58வது நிமிடத்தில் கோலடிக்க, அந்த அணி சற்று உற்சாகம் அடைந்தது. ஆனாலும், போர்ச்சுகலின் அசுர வேகத்துக்கு சுவிஸ் வீரர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.

67வது நிமிடத்தில் ராமோஸ் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்த, ரசிகர்களின் ஆரவாரத்தில் அரங்கம் அதிர்ந்தது. ஆட்டம் முடிய 16 நிமிடம் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், ஜாவோ ஃபெலிக்சுக்கு பதிலாக ரொனால்டோ களமிறக்கப்பட்டார். அவர் ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் அசத்தலாக அடித்த கோல் ‘ஆஃப் சைடு’ என நிராகரிக்கப்பட ஏமாற்றமடைந்தார். புரூனோ பெர்னாண்டசுக்கு பதிலாக உள்ளே வந்த ரஃபேல் லியோ  90’+2’ நிமிடத்தில் சுவிஸ் வீரர்களை சமாளித்து பந்தை துடிப்பாகக் கடத்தி வந்து கோலாக மாற்றினார். அடுத்த 2 நிமிடங்களில் நடுவர் ‘விசில்’ ஊத ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதன் மூலம் கோல் மழை பொழிந்த போர்ச்சுகல் 6-1 என்ற கணக்கில் அபாரமாக வென்றது. இந்த வெற்றியின் மூலம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிக்குள் போர்ச்சுகல் நுழைந்துள்ளது. டிச.10ல் நடைபெறும் 3வது காலிறுதியில் போர்ச்சுகல் - மொரோக்கோ மோதுகின்றன.

* ரா... ரா... ராமோஸ்!

உலக கோப்பை வரலாற்றில் கடந்த 32 ஆண்டுகளாக நாக் அவுட் சுற்றில் யாரும் ஹாட்ரிக் கோலடிக்கவில்லை. அதை போர்ச்சுகல் வீரர் ராமோஸ் நேற்று மாற்றினார். இத்தாலியில் 1990ல் நடந்த உலக கோப்பை நாக் அவுட் சுற்றில் கோஸ்டா ரிகா அணிக்கு எதிராக செக்கோஸ்லோவாக்கியா வீரர் டோமஸ் ஸ்குஹ்ராவி ஹாட்ரிக் கோலடித்தார். அப்போது அந்த அணி 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

* நடப்பு உலக கோப்பையின் முதல் ஹாட்ரிக் சாதனை 21வயது ராமோஸ் வசமானது. தான் களமிறங்கிய முதல் உலக கோப்பை ஆட்டத்திலேயே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

* பீலேவுக்கு பிறகு உலக கோப்பை நாக் அவுட் சுற்றில் ஹாட்ரிக் சாதனை படைத்த மிக இளம் வயது வீரர் என்ற பெருமையும் ராமோசுக்கு கிடைத்துள்ளது.

* போர்ச்சுகல் அணிக்காக களமிறங்கிய இளம் வீரர்கள் ராமோஸ் (21 வயது) 3 கோல் & 1 அசிஸ்ட்; பெலிக்ஸ் (23 வயது) 2 கோல் & 2 அசிஸ்ட்; ரபேல் லியாவோ (23 வயது) 2 கோல் போட்டு அசத்தினர்.

* ரொனால்டோவை ‘உட்கார வைத்த’ சான்டோஸ்

சுவிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரொனால்டோவை பெஞ்ச் தேய்க்கவிட்டு, இளம் வீரர் ராமோஸை களமிறக்கிய பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோசின் முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த போட்டியில் போர்ச்சுகல் சொதப்பி இருந்தால், தனது கதி அதோகதி தான் என்பது சான்டோசுக்கும் தெரியும். அப்படி இருந்தும், சூப்பர் ஸ்டார் ரொனால்டோவை (37 வயது) உட்கார வைக்க வேண்டும் என்ற அவரது வியூகத்துக்கு காரணம் இல்லாமல் இல்லை. ரொனால்டோவின் சமீபத்திய நடவடிக்கைகளே பயிற்சியாளரை இந்த முடிவுக்குத் தள்ளியது என்கிறார்கள் கால்பந்து நிபுணர்கள்.

தென் கொரியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரொனால்டோவை வெளியே அழைத்து மாற்று வீரரை உள்ளே அனுப்பியபோது அவரது ரியாக்‌ஷன் பயிற்சியாளரை காயப்படுத்தி இருக்கிறது. அது மட்டுமில்லை, ‘தான்’ என்ற ஈகோ தலைக்கேறி யாரையும் மதிக்காமல் நடந்துகொள்வதாக ஏற்கனவே ரொனால்டோ மீது புகார்கள் எழுந்துள்ளன. மான்செஸ்டர் யுனைட்டட் கிளப் அணிக்காக விளையாடியபோதும் இதே போன்ற சர்ச்சை கிளம்பியது. பயிற்சியாளராக சான்டோஸ் எடுத்த கடினமான முடிவும், இளம் வீரர்கள் மீது அவர் வைத்த நம்பிக்கையும் வீணாகவில்லை. ரொனால்டோவுக்கு பதிலாக அவர் களமிறக்கிய ராமோஸ் ஹாட்ரிக் அடித்து அசத்தியது, சான்டோசின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

Related Stories: