இந்தியா ஏ அணியுடன் 2வது டெஸ்ட்; வங்கதேசம் ஏ அணி 252 ரன்னில் சுருண்டது.! 6 விக்கெட் அள்ளினார் முகேஷ்

சில்ஹெட்: இந்தியா ஏ அணியுடனான 2வது டெஸ்டில், வங்கதேசம் ஏ அணி முதல் இன்னிங்சில் 252 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. சில்ஹெட் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா ஏ அணி கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஜாகிர் ஹசன் (46 ரன்) தவிர்த்து, மற்ற முன் வரிசை பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் வெளியேற... வங்கதேசம் ஏ அணி 27.1 ஓவரில் 84 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ஷாகாதத் உசேன் - ஜாகிர் அலி ஜோடி 6வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 139 ரன் சேர்த்தது. இருவரும் அரை சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர்.

ஷகாதத் 80 ரன் (138 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), ஜாகிர் அலி 62 ரன் (149 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), ஆஷிகுர் ஸமான் 21 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, வங்கதேசம் ஏ அணி முதல் இன்னிங்சில் 252 ரன் குவித்து ஆல் அவுட்டானது (80.5 ஓவர்). இந்தியா ஏ பந்துவீச்சில் முகேஷ் குமார் 15.5 ஓவரில் 5 மெய்டன் உள்பட 40 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து அரை டஜன் விக்கெட் அள்ளினார். உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 11 ரன் எடுத்துள்ளது. யாஷஸ்வி 8, கேப்டன் ஈஸ்வரன் 3 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: