ஆசிய நாடுகளின் ஆட்டம் ‘குளோஸ்’; கொரியாவை வீழ்த்திய பிரேசில் காலிறுதிக்கு தகுதி

தோஹா: உலக கோப்பை கால்பந்து ‘ரவுண்டு ஆப் 16’ போட்டியில் தென் கொரியாவுக்கு எதிராக கோல் மழை பொழிந்த பிரேசில் அணி 4-1 என்ற கணக்கில் அபாரமாக வென்று காலிறுதிக்கு முன்னேறியது. கத்தாரில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் களமிறங்கிய 32 அணிகளில், போட்டியை நடத்தும் ஆசிய சாம்பியன் கத்தார்,  ஆஸ்திரேலியா,  ஈரான்,  சவுதி அரேபியா,  தென் கொரியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் ஆசிய கண்டத்தை சேர்ந்தவை. கத்தார்,  ஈரான், சவுதி அரேபியா லீக் சுற்றுடன் மூட்டையை கட்ட... ஆஸ்திரேலியா, தென்  கொரியா, ஜப்பான் அணிகள் காலிறுதிக்கு முந்தைய ‘சுற்று 16’க்கு முன்னேறின. ஆஸ்திரேலியா 1-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோற்று வெளியேற, குரோஷியாவுடன் மோதிய ஜப்பான் கூடுதல் நேரம் வரை கடுமையாகப் போராடி தாக்குப்பிடித்தாலும் (1-1), பெனால்டி ஷூட் அவுட்டில் சொதப்பியதால் 1-3 என்ற கோல் கணக்கில் தோற்று ஏமாற்றத்துடன் மூட்டை கட்டியது.

பிரேசில் ஆதிக்கம்: நேற்று அதிகாலை நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் பிரேசில் - தென் கொரியா மோதின. லீக் சுற்று கடைசி ஆட்டத்தில் கேமரூன் அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்ததால், பிரேசில் சற்று கவனமாகவே விளையாடியது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியர் முழு உடல்தகுதியுடன் களமிறங்கியது அந்த அணிக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்திருந்தது. 7வது நிமிடத்தில்  நெய்மர் வாகாக கடத்தித் தந்த பந்தை வினி ஜூனியர் கோலாக்கினார். தொடர்ந்து 13வது நிமிடத்தில்  கிடைத்த பெனால்டி வாய்ப்பை  நெய்மர் கோலாக மாற்றினார். 29வது நிமிடத்தில் ரிச்சர்லிசன், 36வது நிமிடத்தில் லூகாஸ் பேக்குவட்டா  கோல் அடித்து அசத்த, இடைவேளையின்போது பிரேசில் 4-0 என முன்னிலை வகித்தது.

2வது பாதியில் இரு அணிகளும் சம பலத்தில் மல்லுக்கட்டின. அதனால் பிரேசிலால் கோல் எண்ணிக்கையை உயர்த்த முடியவில்லை. 76வது நிமிடத்தில்  தென் கொரியாவின் பதிலி ஆட்டக்காரர் பெய்க் சியூங்ஹோ மின்னல் வேகத்தில் அடித்த பந்து பிரேசில் கோல்கீப்பரை ஏமாற்றி வலைக்குள் புகுந்தது. விறுவிறுப்பான 2வது பாதி ஆட்டத்தின் முடிவில் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில்  வென்று காலிறுதிக்கு முன்னேறியது. நடப்பு உலக கோப்பையில் கடைசி ஆசிய அணியாக களத்தில் இருந்த கொரியாவும் பரிதாபமான தோல்வியுடன் வெளியேறியது.  குரோஷியா - பிரேசில் அணிகள்  மோதும் காலிறுதி ஆட்டம், டிச.9ம்  தேதி எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் இரவு 8.30க்கு தொடங்குகிறது.

Related Stories: