மெஸ்ஸி மிரட்டலில் பணிந்தது ஆஸ்திரேலியா: காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா

தோஹா: உலக கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அர்ஜென்டினா அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரின் லீக் சுற்று முடிவடைந்த நிலையில், பரபரப்பான நாக்-அவுட் சுற்று தொடங்கி அனல் பறக்கிறது.

மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற லீக் சுற்றின் முடிவில் 8 பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மோதி வருகின்றன. இந்த ‘ரவுண்டு ஆப் 16’ முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

இதையடுத்து, அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நேற்று அதிகாலை நடந்த போட்டியில் அர்ஜென்டினா - ஆஸ்திரேலியா மோதின. இந்த போட்டி அர்ஜென்டினா அணியின் கேப்டனாக மெஸ்ஸி களமிறங்கும் 100வது போட்டி என்பதுடன், தொழில்முறை ஆட்டக்காரராக அவருக்கு 1000வது போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதற்கேற்ப அர்ஜென்டினா அணி தொடக்கத்தில் இருந்தே ஒருங்கிணைந்து விளையாடி ஆஸி. கோல் பகுதியை முற்றுகையிட்டு தொடர் தாக்குதல் நடத்தியது. 35வது நிமிடத்தில் மெஸ்ஸி அபாரமாக கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்த, அர்ஜென்டினா உற்சாகம் அடைந்தது. 57வது நிமிடத்தில் ஆஸி. கோல் கீப்பர் சற்று கவனக்குறைவாக செயல்பட, அதை பயன்படுத்தி ஜூலியன் அல்வரெஸ் கோல் போட்டு 2-0 என முன்னிலையை அதிகரித்தார்.

77வது நிமிடத்தில் ஆஸி. வீரர் அடித்த பந்து அர்ஜென்டினாவின் என்ஸோ பெர்னாண்டசின் காலில் பட்டுத்தெறித்து ‘ஓன் கோல்’ ஆக அமைய, ஆட்டம் சூடு பிடித்தது. ஆஸி. தற்காப்பு அரணை சமாளித்து மெஸ்ஸி துல்லியமாக பாஸ் செய்து உருவாக்கிய பல கோல் வாய்ப்புகளை சக வீரர்கள் வீணடித்தனர்.

கடைசி நிமிடத்தில் ஆஸ்திரேலியா கோல் அடிக்க ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்த நிலையில், அர்ஜென்டினா கோல் கீப்பர் டேமியன் மார்டினஸ் துடிப்பாக செயல்பட்டு அதை முறியடித்தார். விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

Related Stories: