பலமிக்க பிரேசிலை வீழ்த்தியது கேமரூன்: ஜெர்சியை கழற்றிவிட்டு ஓடிய வீரருக்கு சிவப்பு கார்டு

தோகா: 32 அணிகள் பங்கேற்றுள்ள 22வது பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடந்து வருகிறது. குரூப் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது நேற்றிரவு 12.30 மணிக்கு குரூப் ஜி பிரிவில் உள்ள பிரேசில் - கேமரூன் அணிகள் மோதின. பிரேசில் அணி இரு வெற்றிகளுடன் ஏற்கனவே ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஆனால் கேமரூன் அணி நாக் அவுட் சுற்று போட்டியில் நீடிக்க, பிரேசில் அணியை வீழ்த்த வேண்டிய நிலை இருந்தது.

இதற்கேற்ப முதல் பாதி ஆட்டத்தில் கேமரூன் அணி வீரர்கள் தொடக்கம் முதலே கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பிரேசில் அணி வீரர்கள் வழக்கம்போல் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் முதல் பாதி ஆட்டம் முழுவதும் பிரேசில் அணியே அதிக நேரம் பந்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. இருப்பினும் பிரேசில் அணியை கோல் அடிக்க விடாமல் கேமரூன் அணி தடுப்பாட்ட வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதன் மூலம் முதல் பாதி ஆட்டம் கோல் அடிக்கப்படாமலேயே முடிவுக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து இரண்டாம் பாதியில் பிரேசில் அணி மாற்று வீரர்கள் அனைவரும் களமிறக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பிரேசில் அணி எப்படியாவது கோல் அடிக்கவேண்டும் என்று தீவிரமாக முயற்சி எடுத்தது. இருந்தும் பிரேசில் அணி வீரர்களால் கேமரூன் கோட்டையை தகர்க்க முடியவில்லை. இரண்டாம் பாதியிலும் இரு அணி தரப்பில் எந்த கோலும் அடிக்கப்படாத நிலையில், கூடுதலாக 9 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதில் கேமரூன் அணியின் வின்சென்ட்-க்கு கிடைத்த கிராஸை, சிறப்பாக அடித்து கோலாக்கினார். இது பிரேசில் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோல் அடித்த மகிழ்ச்சியில் வின்சென்ட் ஜெர்சியை கழற்றி சுழற்ற, நடுவரால் சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது.

இதன் மூலம் பிரேசில் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூன் அணி வீழ்த்தி சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பைத் தொடரில் பிரேசில் அணியை வீழ்த்திய முதல் ஆப்பிரிக்கா அணி என்ற சாதனையையும் கேமரூன் அணி இந்த வெற்றியின் மூலம் படைத்துள்ளது. அதேபோல் தோல்வியை சந்தித்தாலும் குரூப் ஜி பிரிவில் இருந்து பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: