44 வருட சாதனை தகர்ந்தது: சவுதியை வீழ்த்தியும் வெளியேறிய மெக்சிகோ

குரூப் சி பிரிவில் நேற்றிரவு 12.30 மணிக்கு லுசைல் மைதானத்தில் சவுதி அரேபியா-மெக்சிகோ மோதின. சவுதி முதல் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்திய நிலையில், போலந்துடன் தோல்வியை சந்தித்தது. அதேபோல் மெக்சிகோ, போலந்துடன் டிரா, அர்ஜென்டினாவிடம் தோல்வி அடைந்திருந்தது. ஆட்டம் தொடங்கியது முதலே சவுதி அட்டாக் செய்ய மெக்சிகோ தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. 2வது பாதியில் 2வது நிமிடத்தில் (ஆட்டத்தின் 47வது நிமிடம்) மெக்சிகோவின் மார்டின் கோல் அடித்தார்.

தொடர்ந்து 51வது நிமிடத்தில் ஃபிரீ கிக் சாவேஸ் 2வது கோலை அடித்தார். மேலும் ஒரு கோல் அடித்தால், ரவுன்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறும் என நிலையில் மெக்சிகோ வீரர்கள் கடுமையாக போராடினர். 86வது நிமிடத்தில் மெக்சிகோ கோல் அடிக்க, அது ஆஃப் சைடாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கூடுதலாக 6 நிமிடம் வழங்கப்பட்டது. அதில் சவுதியின் சலீன் கோல் அடிக்க (95வது நிமிடம்), மெக்சிகோவின் கனவு மொத்தமாக கலைந்தது. இறுதியில் 2-1 என மெக்சிகோ வெற்றிபெற்றது.

சி பிரிவில் போலந்து, மெக்சிகோ தலா 4 புள்ளி பெற்ற நிலையில், 3 போட்டிகளிலும் சேர்த்து கோல்கள் அடிப்படையில் போலந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மெக்சிகோ, சவுதி வெளியேறின. கடந்த 44 ஆண்டுகளில் மெக்சிகோ முதல்முறையாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளது. அதற்கு முன் மெக்சிகோ 7 முறை தொடர்ந்து ரவுன்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியது. அதே நேரம் 1986ம் ஆண்டுக்கு பின் போலந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

Related Stories: