பிரேசில்-ஸ்விட்சர்லாந்து மோதிய போட்டியை டிவியில்தான் பார்த்தேன்: ஸ்டார் பிளேயர் நெய்மர் பேட்டி

தோஹா: ‘பிரேசில்-ஸ்விட்சர்லாந்து இடையேயான உலகக்கோப்பை கால்பந்து போட்டியை, டிவியில்தான் பார்த்தேன். மைதானத்துக்கு சென்று நேரில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது’ என்று பிரேசில் அணியின் ஸ்டார் பிளேயர் நெய்மர் கூறியுள்ளார். 32 நாடுகள் பங்கேற்றுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்படும் பிரேசில் இந்த தொடரில் தனது முதல் போட்டியில் கடந்த 25ம் தேதி செர்பியாவுடன் மோதியது.

இதில் 2-0 என்ற கணக்கில் பிரேசில் வென்றது. நேற்று நடந்த போட்டியில் ஸ்விட்சர்லாந்துடன் மோதியது. முதல் போட்டியில் ஆடிய பிரேசில் அணியின் ஸ்டார் பிளேயர் நெய்மர், கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, நேற்றைய போட்டியில் ஆடவில்லை. மேலும் நேற்று நடந்த போட்டியை மைதானத்திற்கு சென்று நேரில் பார்க்க வேண்டும் என்று நெய்மர் விரும்பினார். ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு ‘பிசியோதெரப்பி’ சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரின் மேற்பார்வையில் பிசியோதெரப்பிஸ்ட், நெய்மர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கே வந்து சிகிச்சை அளித்தார்.

இதனால் அவர் சக வீரர்களுடன் மைதானத்திற்கு சென்று போட்டியை நேரில் பார்க்க முடியவில்லை. இதுகுறித்து நெய்மர் கூறுகையில், ‘‘பிசியோ சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், என்னால் மைதானத்துக்கு செல்ல முடியவில்லை. அதனால் சிகிச்சையின் போது ஓட்டல் அறையில் உள்ள டிவியில்தான் நான் இந்தப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன். 80வது நிமிடம் வரை எங்கள் அணியால் கோல் அடிக்க முடியவில்லை என்பது எனக்கு டென்சனாக இருந்தது.

ஒரு வழியாக காஸ்மிரோ அற்புதமாக கோல் அடித்து, அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இந்தப் போட்டியை நேரில் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது’’ என்று தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் பிரேசில் அணி, நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: