உலக கோப்பை கால்பந்து 2022: கடைசி நிமிடங்களில் 2 கோல் வேல்ஸ் அணியை வீழ்த்தியது ஈரான்

உலக கோப்பை கால்பந்து தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், வேல்ஸ் அணியுடன் மோதிய ஈரான் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதால் இடைவேளை வரை 0-0 என சமநிலை நிலவியது. 2வது பாதியிலும் இதே நிலை நீடித்ததால் 90 நிமிட ஆட்டத்தின் முடிவிலும் வெற்றி யாருக்கு என்பது முடிவாகாமல் இழுபறி நீடித்தது.  கீப்பருக்கு சிவப்பு அட்டை: 86வது நிமிடத்தில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதாக வேல்ஸ் கோல் கீப்பர் வேய்ன் ஹென்னஸி சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. நடப்பு உலக கோப்பையில் ரெட் கார்டு பெற்ற முதல் வீரர் ஹென்னஸி தான். அவருக்கு முதலில் மஞ்சள் அட்டை காட்டப்பட்ட நிலையில், ‘விஏஆர்’ மெய்நிகர் நடுவரின் முடிவால் அது சிவப்பு அட்டையாக மாறியது குறிப்பிடத்தக்கது. வீரர்களுக்கு காயம் உள்ளிட்ட காரணங்களுக்காக 13 நிமிடம் கூடுதலாக வழங்கப்பட... 90’+8’ல் ரூஸ்பெஹ் செஸ்மி, 90’+11’ல் ரமின் ரிஸேயன் கோல் அடிக்க, ஈரான் அணி 2-0 என்ற கணக்கில் த்ரில் வெற்றியை பதிவு செய்து 3 புள்ளிகளை தட்டிச் சென்றது.

Related Stories: