மங்களூருவில் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்த முதல்வர் கூட்டத்தில் குண்டு வைக்க திட்டம்: விசாரணையில் ஷாரிக் அதிர்ச்சி தகவல்

பெங்களூரு: மங்களூருவில் முதல்வர் பசவராஜ் பொம்மை  கலந்து கொள்ள  திட்டமிட்டிருந்த கூட்டத்தில் வெடிகுண்டு வெடிக்க  திட்டமிட்டு இருந்தோம். ஆனால், முதல்வர் நிகழ்ச்சி கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதால், தனது  திட்டம் தோல்வியில் முடிந்தது என போலீஸ் விசாரணையில் ஷாரிக் தெரிவித்துள்ளார். மங்களூருவில் கடந்த 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்தி தினமும் அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: ஹிஜாப் அணிய தடை விதித்தது, பசுவதை தடை சட்டம், மதமாற்ற தடை சட்டம் கொண்டுவந்து இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வரும் கர்நாடகா பாஜ அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தி, தேர்தல் நேரத்தில் அக்கட்சி மீது மக்களுக்கு இருக்கும் இமேஜை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எந்தெந்த இடத்தில் யார் யார் மூலம் செயல்படுத்துவது என்பது குறித்து துபாய் நாட்டில் இயங்கிவரும் சில  தீவிரவாத அமைப்பு தலைவர்களுடன் ஷாரிக் ஆலோசனை நடத்தி உள்ளார். கடந்த வாரம் மங்களூருவில் முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்து கொள்ள திட்டமிட்டிருந்த கூட்டத்தில் வெடிகுண்டு வெடிக்க  திட்டமிட்டதாகவும், முதல்வர் நிகழ்ச்சி கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதால், தனது திட்டம் தோல்வியில் முடிந்ததால் கார்வார் மாவட்டம், மண்ணுகுட்டே காந்திநகரில் இயங்கி வரும்  சங்பரிவார் அமைப்பின் முக்கிய அலுவலகமான சங்கனிகேத்தனை வெடி வைத்து தகர்க்க ஷாரிக் திட்டமிட்டுள்ளார். சங்கனிகேத்தனை தகர்க்க எப்படி  செல்வது  என்பது குறித்து ஷாரிக் தனது செல்போனில் 8 முறை லெகேஷனை பார்த்து, வரைப்படம் தேடி உள்ளார். இவ்வாறு என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

* ரூ.5 லட்சம் பரிசு

முகமது ஷாரிக்கிற்கு உதவியாக இருந்த அப்துல் மதீன் மற்றும் அராபத் அலி ஆகியோருக்கு வங்க தேசத்தில் இயங்கி வரும் ஜமாத்-உல்-முஜாஹீதீன் என்ற  தீவிரவாத அமைப்புடன் நேரடி தொடர்பில் இருப்பவர் என்று விசாரணையில்  தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருக்கும் இருவரையும் அடையாளம் காட்டுவோருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்குவதாக என்ஐஏ அறிவித்துள்ளது.

Related Stories: