தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் அடிப்படையில் ஏற்கனவே தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை  நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் அவர்களின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின்மீது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 19-10-2022 அன்று நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், “துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார்கள். மேற்படி அறிவிப்பினைச் செயல்படுத்திடும் வகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 65 இலட்சம் ரூபாயினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று உத்தரவிட்டுள்ளார்கள். 

Related Stories: