டிட்கோ நிறுவனத்தின் 2021-22ம் ஆண்டு பங்கு ஈவுத் தொகை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.150 கோடி வழங்கப்பட்டது: தமிழக வரலாற்றில் அதிகபட்சம்

சென்னை: டிட்கோ நிறுவனத்தின் 2021-22ம் ஆண்டிற்கான பங்கு ஈவுத் தொகை ரூ.150 கோடி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), தனியார் தொழில் முனைவோருடன் இணைந்து பெரும் முதலீடுகளை ஈர்த்து, மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நடுத்தர மற்றும் பெரிய தொழில் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களை நிறுவி, மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கடந்த 57 ஆண்டுகளில் இந்நிறுவனம் தொழிற்துறை பூங்காக்கள் உட்பட பல்வேறு துறைகளில் 100க்கும் மேற்பட்ட திட்டங்களை ஊக்குவித்ததுடன், விவசாய ஏற்றுமதிப் பகுதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் உருவாக்கியுள்ளது.

இவற்றுள் குறிப்பிடத்தகுந்த சில நிறுவனங்களான டைட்டன், டைடல் பார்க், எல் அன் டி ஷிப் பில்டிங், மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி, ஸ்பிக், அசென்டாஸ் ஐடி பார்க், ராமானுஜம் ஐடி பார்க், தமிழ்நாடு பெட்ரோப்ரோடக்ட்ஸ், டான்பாஃக், டான்ப்ளோரா, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சென்னை வர்த்தக மையம் ஆகியவையும் அடங்கும். மேலும், பாதுகாப்புத் தொழில் பெருந்தடம் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கான முகமை நிறுவனமாகவும் டிட்கோ செயல்படுகிறது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. 2021-22ம் நிதியாண்டில் இந்நிறுவனமானது வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.252,17,49,676 ஈட்டியுள்ளது.

2021-22ம் ஆண்டு மார்ச் 31.ம் தேதியுடன் முடிவடைந்த வருடத்திற்கான நிகர லாபத்தில் 59.48% பங்கு ஈவுத்தொகை ரூ.150 கோடி தமிழ்நாடு அரசிற்கு செலுத்துவதாக 23.09.2022 அன்று நடைபெற்ற 57வது வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் டிட்கோ அறிவித்தது. அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் 2021-22ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகை ரூ.150 கோடிக்கான காசோலையை வழங்கினார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன வரலாற்றிலேயே மிக அதிகமான பங்கு ஈவுத்தொகை வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன வரலாற்றிலேயே மிக அதிகமான பங்கு ஈவுத்தொகை வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Related Stories: