தியாகதுருகத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது-3பேர் தப்பி ஓட்டம் - 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்

கள்ளக்குறிச்சி : தியாகதுருகத்தில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் கால்நடை மருத்துவமனை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றிவளைத்தனர்.  

அதில் 2 பேர் தப்பியோடி விட்டனர். 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். பிடிப்பட்ட 3 பேரிடம் விசாரணை செய்ததில் அவர்கள், உளுந்தூர்பேட்டை அடுத்த எறையூர்பாளையம் கிராமத்தை சேர்ந்த சைமன் மகன் டேவிட்குமார்(23), அதே ஊரை சேர்ந்த சைமன் மகன் ரட்சகநாதன்(19), எறையூர் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஆரோக்கியதாஸ்(19) என்பதும், தப்பியோடியவர்கள் அதே ஊரை சேர்ந்த ராஜ்பெர்னான்டஸ், செல்வமணி என்பதும், இவர்கள் 5 பேரும் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் 3 பைக்குகளை அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து டேவிட்குமார், ரட்சகநாதன் ஆரோக்கியதாஸ் ஆகிய மூன்று பேர்களையும் கைது செய்தனர். தப்பிய ஓடி தலைமறைவான ராஜ்பெர்னான்டஸ், செல்வமணி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

இதேபோன்று கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன்மலை பகுதியில் உள்ள குண்டியாநத்தம் கிராமத்தை சேர்ந்த ராமன் மகன் தீர்த்தான் என்பவரது வீட்டில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டில் அரை கிலோ கஞ்சா விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கஞ்சா விற்பனை செய்து வந்த தீர்த்தன் மீது கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ளவரை தேடி வருகின்றனர்.

Related Stories: