நாடு முழுவதும் முழு சந்திர கிரகணம்: கோயில்கள் பல மணி நேரம் மூடல்: கனமழையால் சென்னையில் தெரியவில்லை

சென்னை: நாடு முழுவதும் நேற்று சந்திர கிரகணம் நிகழ்ந்தது. அப்போது, திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களின் நடை பல மணி நேரம் சாத்தப்பட்டது. கனமழை காரணமாக சென்னையில் தெரியவில்லை.சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் போது ஏற்படும். நேற்று நாடு முழுவதும் சந்திர கிரகணம் ஏற்பட்டது. இந்தியாவில் அனைத்து இடங்களில் முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியவில்லை. முழு மற்றும் பல்வேறு பகுதி வடிவ நிலைகளின் முடிவினை நாட்டின் கிழக்கு பகுதிகளில் காண முடிந்தது.

மேற்கு வானில் சூரியன் அந்திசாயும் போது, கிழக்கு வானில் நிலவு வெளிப்படும் நேரத்தில் குறைவான காலகட்டத்தில் பகுதி சந்திர கிரகணம் பார்க்க முடிந்தது. தமிழகத்தில் சந்திர கிரகணம் மாலை 5 மணி 38 நிமிடங்களில் தொடங்கியது. 40 நிமிடங்கள் வரை காண முடிந்தது. சென்னையில் மாலை 5.38 மணிக்கும், சேலத்தில் 5.49 மணிக்கும், கோவையில்  5.54 மணிக்கும், மதுரையில் 5.57 மணிக்கு சந்திர கிரகணம் நிகழ்ந்தது.ஆனால், சென்னையில் நேற்று மாலை கனமழை பெய்ததால், சந்திர கிரகணத்தை சரியாக காண முடியவில்லை.  

சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான கோயில் 11 மணி நேரம் மூடப்பட்டது. தமிழகத்தில் மதுரை மீனாட்சியம்மன், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ராமேஸ்வரம் ராமநாதபுரம் சுவாமி கோயில், திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில், தஞ்சை பெரிய கோயில், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில், ஜெயங்கொண்டம் கங்கை கொண்ட சோழபுரம், திருச்சி ரங்கம் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், குமரி பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில் பல மணி நேரம் மூடப்பட்டது. சந்திர கிரகணம் முடிந்த பிறகு கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, திறக்கப்பட்டது.

*இந்த ஆண்டில் கடைசி கிரகணம்

பொதுவாக ஒரு வருடத்தில் 2-7 கிரகணங்கள் ஏற்படலாம். இதில் 2-5 சூரிய கிரகணமும், அதிகபட்சமாக 3 சந்திர கிரகணமும் ஏற்படலாம். சில சமயம் ஒரு சந்திர கிரகணம் ஏற்படாமலும் போகலாம். ஆனால், ஒரு வருடத்தில் அதிகபட்சம் 7 கிரகணங்கள்தான் வரும்.  இதில் 4 சூரிய கிரகணமாகவும், 3 சந்திர கிரகணமாகவும் இருக்கலாம். இந்த ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் ஏற்பட்டுள்ளது.  இதில் 2 சூரிய கிரகணம், 2 சந்திரக் கிரகணம். நேற்று நிகழ்ந்தது முழு சந்திர கிரகணம். இதுதான் இந்த ஆண்டின் கடைசி கிரகணமாகும்.

*திருவண்ணாமலையில் கோயில் மூடவில்லை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆன்மிக மரபின்படி, கிரகண நேரங்களில் கோயில் நடை அடைக்கும் வழக்கம் இல்லை. இதனால் நேற்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு, கோயில் நடை வழக்கம்போல் திறக்கப்பட்டிருந்தது. சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: