டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர்; கார்சியா, சபலென்கா இறுதி போட்டிக்கு தகுதி: நம்பர் 1 ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

போர்ட் வொர்த்: டாப் 8 வீராங்கனைகள் பங்கேற்றுள்ள டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் போர்ட் வொர்த் நகரில் நடந்து வருகிறது. இதில் தலா 4 பேர் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதினர்.

இதன் முடிவில், டிரேசி ஆண்டின் பிரிவில் 3 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்த போலந்தின் இகா ஸ்வியாடெக், 2வது இடம்பிடித்த பிரான்சின் கரோலின் கார்சியா, நான்சி ரிச்சி குரூப்பில் முதல் 2 இடம் பிடித்த கிரீஸ் நாட்டின் மரியா சக்கரி, பெலாரசின் அரினா சபலென்கா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இன்று அதிகாலை நடந்த முதல் அரையிறுதியில் 27 வயதான மரியா சக்கரி, 29 வயதான கரோலின் கார்சியா மோதினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கார்சியா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.

தொடர்ந்து மற்றொரு அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனையான 21 வயதான இகா ஸ்வியாடெக், 7ம் நிலை வீராங்கனையான 24 வயது அரினா சபலென்கா மோதினர். இதில் முதல் செட்டை 6-2 என சபலென்கா கைப்பற்றிய நிலையில், 2வது செட்டை 6-2 என ஸ்வியாடெக் தன் வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை 6-1 என சபலென்கா கைப்பற்றி பைனலுக்குள் நுழைந்தார். இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். நாளை நடைபெறும் இறுதி போட்டியில் சபலென்கா-கார்சியா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

Related Stories: