ஐசிசி தலைவராகவும் வாய்ப்பு இல்லை; பிசிசிஐ-ல் இருந்து கங்குலி வெளியேற்றப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்

மும்பை: பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி மற்றும் செயலாளராக ஜெய் ஷா கடந்த 2019ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்டனர். இவர்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதால், புதிய நிர்வாகிகள் தேர்தல் வரும் 18ம்தேதி நடைபெற உளளது. பிசிசிஐ உயர் பதவிகளில் 6 வருடங்களுக்கு மேல் இருப்பவர்கள் மீண்டும் போட்டியிட முடியாது என்ற விதி இருந்தது. ஆனால் அந்த முறையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்ததால் கங்குலி மற்றும் ஜெய்ஷா மீண்டும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே கங்குலி, ஜெய் ஷா உள்ளிட்ட பல பிசிசிஐ முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மும்பை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கங்குலி தேர்தலில் நிற்க வேண்டாம் எனவும், ஜெய் ஷா மீண்டும் செயலாளர் பதவிக்கு போட்டியிடப்போவதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதையடுத்து கர்நாடக கிரிக்கெட் வாரிய தலைவரான ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கு ஆஷிஷ் ஷெலரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேறுயாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் இவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனிடையே கங்குலி, ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதால், பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டார் என தகவல் வெளியானது. ஆனால் 2025ம் ஆண்டு வரை பிசிசிஐ தலைவராக கங்குலி விரும்பியதாகவும், அதற்காக இருக்க நேற்று காலை 10 மணி வரைகூட முயற்சி செய்ததாகவும், இதில் ஆதரவு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ரோஜர்பின்னியின் பெயரை அவர் மனுத்தாக்கலின் போது முன்மொழியவில்லை. அலுவலகத்தை விட்டு காரில் ஏறி அவர் வேகமாக சென்றுவிட்டார். தலைவராக கங்குலியின் செயல்திறன், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இல்லை. மேலும் ஒருவர் இதற்கு முன் 2முறை பதவி வகித்த முன்மாதிரி இல்லை, மேலும் புதிய ஸ்பான்சர்களை அவர் ஆமோதித்ததாகவும் நிர்வாகிகள் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் பிசிசிஐக்கு வழிகாட்டியாக இருக்கும் சீனிவாசன்,கூட்டத்தில் கங்குலியை கடுமையாக விமர்சித்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் கங்குலி ஏமாற்றத்துடன் வெளியேறி உள்ளார். இதனிடையே ஐசிசி தலைவர் பதவிக்கு பிசிசிஐயால் கங்குலி ஆதரிக்கப்பட மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: