9 ரன் வித்தியாசத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்த இந்தியா; தோல்வி இளம்வீரர்களுக்கு நல்ல அனுபவம்: கேப்டன் ஷிகர் தவான் பேட்டி

லக்னோ: இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி நேற்று லக்னோவில் நடந்தது. மழை காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்ரிக்கா 40 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன் குவித்தது. அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 65 பந்தில் 74, டேவிட் மில்லர் 63 பந்தில் 75 ரன் எடுத்து நாட்அவுட்டாக களத்தில் இருந்தனர். டிகாக் 48 ரன் அடித்தார்.

பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் சுப்மான் கில் 3, கேப்டன் ஷிகர் தவான் 4 ரன்னில் ஆட்டம் இழந்தனர். டெஸ்ட் போல் மந்தமாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 42 பந்தில் 19, இஷான் கிஷன் 37 பந்தில் 20 ரன்னில் வெளியேற ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக 37 பந்தில் 8 பவுண்டரியுடன் 50, ஷர்துல் தாகூர் 33 ரன் அடித்தனர். 40 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களே எடுத்த இந்தியா 9 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி வரை தனி நபராக போராடிய சஞ்சு சாம்சன் 63 பந்தில், 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 86 ரன்னில் களத்தில் இருந்தார்.

தென்ஆப்ரிக்க பவுலிங்கில் லுங்கி நிகிடி 3, ரபாடா 2 விக்கெட் வீழ்த்தினர். ருதுராஜின் ஆமைவேக ஆட்டம், டெத் ஓவர்களில் மோசமான பந்துவீச்சு, பீல்டிங் தான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஹென்ரிச் கிளாசென் ஆட்டநாயகன் விருதுபெற்றார். 2வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் ராஞ்சியில் நடக்கிறது.

தோல்வி குறித்து இந்திய கேப்டன் ஷிகர் தவான் கூறியதாவது: இளம் வீரர்கள் விளையாடிய விதம் மிகவும் பெருமையாக உள்ளது. ஸ்ரேயாஸ், சாம்சன், ஷர்துல் ஆகியோர் ஆடிய விதம் அபாரமானது. 250 ரன் அதிகம் என்று நினைத்தேன், ஏனென்றால் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்தது. பீல்டிங் சிறப்பாக அமையவில்லை. கேட்ச்களை தவறவிட்டோம். எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. ஆனால் இது இளம் வீரர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாகவும் கற்றலாகவும் இருக்கும், என்றார்.

தென்ஆப்ரிக்க கேப்டன் பவுமா கூறுகையில், சஞ்சு அதிரடியாக அடித்ததில் கடைசியில் கொஞ்சம் இறுக்கமாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்ய பிட்ச் சற்று கடினமாக இருந்தது. டேவிட் மற்றும் கிளாசென் சிறப்பாக ஆடினர். எங்கள் பந்துவீச்சு நன்றாக இருந்தது, என்றார்.

ஆட்டநாயகன் கிளாசென் கூறுகையில், நான் பேட்டிங் செய்ய சென்றபோது பந்து நன்கு ஸ்பின் ஆனது. ஆனால் நாங்கள் வலைகளில் கடுமையாக உழைத்துள்ளோம், இந்தியாவுக்கு எதிராக நான் ஒரு நல்ல சாதனை படைத்துள்ளேன், மீதமுள்ள போட்டிகளிலும் ரன் எடுக்க காத்திருக்கிறேன், என்றார்.      

Related Stories: