இரானி கோப்பை கிரிக்கெட் இதர இந்தியா வலுவான முன்னிலை

ராஜ்கோட்: ரஞ்சி சாம்பியன் சவுராஷ்டிரா அணியுடனான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில்,  இதர இந்தியா அணி முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெற்றது. ராஜ்கோட், சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இதர இந்தியா முதலில் பந்துவீச... ரன் குவிக்க முடியாமல் திணறிய சவுராஷ்டிரா 24.5 ஓவரில்  வெறும் 98 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இதர இந்திய அணி, முதல் நாள் முடிவில்  3 விக்கெட் இழப்புக்கு 205 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ஹனுமா விஹாரி 62 ரன், சர்பராஸ்கான் 125 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

ஹனுமா 82 ரன் (184 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்), சர்பராஸ் 138 ரன்னில் (178 பந்து, 20 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினர். ஸ்ரீகர் பரத் 12, ஜெயந்த் யாதவ் 37 ரன்னில் ஆட்டமிழக்க, பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த சவுரவ் குமார் 55 ரன்னில் (78 பந்து, 10 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். முகேஷ் குமார் 11, குல்தீப் சென் 1 ரன்னில் ஆட்டமிழக்க, இதர இந்தியா முதல் இன்னிங்சில் 374 ரன் குவித்து ஆட்டமிழந்தது (110 ஓவர்). உம்ரான் மாலிக் 16 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

சவுராஷ்டிரா தரப்பில் சேத்தன் சகாரியா 28 ஓவரில் 5 மெய்டன் உள்பட 93 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். கேப்டன் ஜெய்தேவ் உனத்கட், சிராக் ஜனி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 276 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் ஹர்விக் தேசாய் 20, ஸ்நெல் படேல் 16 ரன் எடுத்து சவுரவ் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். சிராக் ஜனி 3 ரன், தர்மேந்திரசிங் ஜடேஜா 8 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: