டி.20 உலகக்கோப்பை அணியில் ஷமிக்கு பதிலாக உம்ரான்மாலிக்?.. பிசிசிஐ ஆலோசனை

ஐதராபாத்: அட்டகாசமான பேட்டிங் வரிசை உள்ள போதும், இந்திய அணியின் பவுலிங் மட்டும் இன்னும் சொதப்பலாகவே உள்ளது. டெத் ஓவர்களில் புவனேஷ்வர் குமார் ரன்களை வாரி வழங்குவதாக அதிருப்திகள் இருந்தன. ஆனால் காயத்தில் இருந்து மீண்டு வந்த ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகிய பவுலர்களும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆஸ்திரேலியாவுடனான 3வது டி20-ல் கூட 117 - 6 விக்கெட்கள் சென்றுவிட்ட போதும், 185 ரன்கள் வரை அடிக்கவிட்டு விட்டனர்.

இந்நிலையில் பிசிசிஐ முகமது ஷமியின் விஷயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறது. டி20 உலகக்கோப்பை நடக்கும் ஆஸ்திரேலிய களத்தில் ஷமி பொருத்தமாக இருப்பார். இதற்காக பேக் - அப் வீரராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்ததாகவுள்ள தென்னாப்பிரிக்க தொடருக்குள் அவர் முழு ஃபிட்னஸுடன் வந்தால் மட்டுமே டி20 உலகக்கோப்பைக்கு செல்ல முடியும்.

ஆனால் அவர் தயாராவதற்கு இன்னும் பல நாட்கள் அவகாசம் தேவைப்படும் என தெரிகிறது. இதனால் இளம் வீரரான உம்ரான் மாலிக்கை சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. இந்திய அணியில் அசால்டாக 150+ கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடியவர் உம்ரான் மாலிக். ஆஸ்திரேலியா களங்களில் வேகமும், பவுன்ஸும் சிறப்பாக இருக்கும் என்பதால் உம்ரான் மாலிக் பயன்படலாம். எனவே ஷமிக்கு பதிலாக உம்ரானை தேர்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: