விராட், சூர்யகுமார் அசத்தல் 3வது டி20ல் இந்தியா வெற்றி

ஐதராபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டி20 போட்டியில், 6  விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

ராஜிவ் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் முதலில் பந்துவீச முடிவு செய்தார். கிரீன், கேப்டன் பிஞ்ச் இருவரும் ஆஸி. இன்னிங்சை தொடங்கினர். பிஞ்ச் 7 ரன்னில் வெளியேற, அதிரடியாக விளையாடிய கிரீன் 19 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 52 ரன் (21 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி புவனேஷ்வர் வேகத்தில் ராகுல் வசம் பிடிபட்டார். மேக்ஸ்வெல் 6 ரன்னில் ரன் அவுட்டாக, ஸ்மித் 9 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இங்லிஸ் 24 ரன், மேத்யூ வேட் 1 ரன் எடுத்து வெளியேறினர்.

ஆஸி. அணி 13.5 ஓவரில் 117 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், டேவிட் -  சாம்ஸ் இணைந்து அதிரடியில் இறங்க, ஆஸி. ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. டேவிட் 54 ரன் (27 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஹர்ஷல் பந்துவீச்சில் ரோகித் வசம் பிடிபட்டார். ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன் குவித்தது. சாம்ஸ் 28 ரன், கம்மின்ஸ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் அக்சர் 3, புவனேஷ்வர், சாஹல், ஹர்ஷல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 187  ரன் எடுத்து வென்றது. சூர்யகுமார் யாதவ் 69 ரன் (36 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்), விராட் கோலி 63 ரன் (48 பந்து, 3 பவுண்டரி, 4  சிக்சர்) விளாசினர்.  பாண்டியா 25  ரன், ரோகித் சர்மா 17  ரன் எடுத்தனர். இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Related Stories: