நாசரேத்தில் 19 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பாலை மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாசரேத்: நாசரேத்தில் 19 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பாலை மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா? என பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டார மக்கள் பயன்ெபறும் வகையில் திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பு ஆலை, நாசரேத்தில் கடந்த 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டு முனைப்புடன் செயல்பட்டு வந்தது. இங்கு பருத்தி பஞ்சு நூல்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

இந்த ஆலை மூலம் நேரடியாக ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 5 ஆயிரம் தொழிலாளர்களும் வேலை கிடைக்கப்பெற்றனர். இந்த நூற்பு ஆலை மூலம் திருச்செந்தூர், நாசரேத் சுற்றுவட்டார மக்கள் வாழ்வாதாரம் மேம்பட்டு காணப்பட்டது. மற்ற வணிகமும் சிறப்புற நடந்து வந்தது.

ஆனால், கடந்த 2003ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த ஆலை எவ்வித முன்னறிவிப்பின்றி திடீரென மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து நாசரேத் நகரம், கடந்த 19 ஆண்டுகளாக தொழில் தரப்பில் பின்தங்கி வருகிறது. இந்த ஆலையை அப்போது இருந்த அரசு திறக்க நடவடிக்கை எடுக்கும் என தொழிலாளர்கள் பெரிதும் நம்பியிருந்தனர். ஆனால் திறக்கப்படவில்லை. இதனால் வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்கள் தொடர்ந்து நூற்பு ஆலையை திறக்க வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இக்கோரிக்கை கிணற்றில் போடப்பட்ட கல்லாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தூத்துக்குடி தொகுதி எம்பியான கனிமொழியிடம் தொழிலாளர்கள், வியாபாரிகள் முறையிட்டனர். இதை ஏற்றுக்கொண்டுள்ள அவர், நாசரேத்தில் மூடிக்கிடக்கும் திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பாலை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இல்லாதபட்சத்தில் அதே இடத்தில் அதைச் சார்ந்த தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். இதனால் நாசரேத்தில் செயல்பட்ட நூற்பு ஆலையை நம்பியுள்ள தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த ஆலை மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

தொழில்நுட்ப பூங்கா: சிறுகதை எழுத்தாளர் நாசரேத் ஆறுமுகபெருமாள் கூறுகையில், நாசரேத் கல்வி நகரமாக விளங்குகிறது. இங்கு தொழிற்படிப்பு படித்தவர்கள் உரிய தொழில் கிடைக்காமல் தூத்துக்குடி, கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு முதலில் குறைந்த சம்பளத்தில் செல்ல வேண்டியுள்ளது. இங்கே கூட்டுறவு அல்லது அரசு சார்பில் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டால் படித்த இளைஞர்கள் வாழ்வாதாரம் பெறுவார்கள். எனவே நாசரேத்தில் செயல்பட்ட திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் நூற்பாலை துவங்க இயலாதபட்சத்தில் அதைச் சார்ந்த தொழில்நுட்ப பூங்காவை அரசு சார்பில் நிறுவ வேண்டும்’’ என்றார்.

நிவாரண தொகை: தூத்துக்குடி மாவட்ட ஏஐடியுசி பொதுச்செயலாளர் நாசரேத் கிருஷ்ணராஜ் கூறுகையில், ‘‘திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பாலை முன்னர் செயல்பட்டபோது நாசரேத் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் வாழ்வாதாரம் உயர்ந்திருந்தது. தற்போது இந்த தொழிலாளர்கள் வேலை கிடைக்காமல் தூத்துக்குடி, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் இந்த ஆலையை நம்பியிருந்த தொழிலாளர்களில் பலர் வேறு தொழிலுக்கு செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர். வேலை பார்த்து நலிவடைந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவித்தொகை வழங்கிட வேண்டும். அரசு பரிசீலனை செய்து கூட்டுறவு நூற்பாலையை திறக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: