27 ஆண்டு பயணம் முடிவுக்கு வந்தது, யுஎஸ் ஓபன் டென்னிஸ் 3-வது சுற்றில் போராடி தோல்வி; கண்ணீருடன் விடைபெற்றார் செரீனா

நியூயார்க்: யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் போராடி தோற்ற அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (40 வயது), கண்ணீர் மல்க ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார். தொழில்முறை வீராங்கனையாக அவரது 27 ஆண்டு டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. மகளிர் டென்னிசில் மகத்தான சாதனைகளுக்கு சொந்தக்காரரான செரீனா, நடப்பு யுஎஸ் ஓபன் தொடருடன் ஓய்வு பெறப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால் அவர் விளையாடிய ஒவ்வொரு சுற்று ஆட்டத்தையும் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் திரண்டதுடன், ஆரவார ஆதரவு கொடுத்து ஊக்குவித்து வந்தனர். இந்நிலையில், 3வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அய்லா டாம்யானோவிச்சுடன் மோதிய செரீனா 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் அய்லா கடும் நெருக்கடி கொடுக்கவே, ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. அதில் அபாரமாக செயல்பட்ட அய்லா 7-6 (7-4) என்ற கணக்கில் வென்று 1-1 என சமநிலை ஏற்படுத்தினார்.

அதே வேகத்துடன் 3வது செட்டில் அதிரடியாக விளையாடி செரீனாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த அவர் 5-7, 7-6 (7-4), 6-1 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 3 மணி, 5 நிமிடத்துக்கு நீடித்தது. 1995ல் 14 வயது சிறுமியாக தனது முதல் தொடரில் களமிறங்கிய செரீனா, 27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தில் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் உள்பட மொத்தம் 73 டபுள்யு.டி.ஏ பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை வென்று மகத்தான சாதனை படைத்துள்ள அவர், 319 வாரங்களுக்கு உலகின் நம்பர் 1 வீராங்கனையாகவும் ஆதிக்கம் செலுத்தியுள்ளார். யுஎஸ் ஓபன் 3வது சுற்றுடன் அவரது டென்னிஸ் பயணம் முடிவுக்கு வந்ததை அடுத்து, தனது வெற்றிகளுக்கு முக்கிய காரணமாகவும் உறுதுணையாகவும் இருந்த பெற்றோர், சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கண்ணீர் மல்க விடைபெற்றார். சாதனை வீராங்கனைக்கு அனைத்து துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Related Stories: