யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, நம்பர் 1 வீரர் டானில் மெட்வதேவ் (ரஷ்யா) தகுதி பெற்றார். 3வது சுற்றில் சீனாவின் யிபிங் வூ உடன் மோதிய மெட்வதேவ் 6-4, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இப்போட்டி 1 மணி, 55 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 3வது சுற்றில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் 7-6 (7-3), 6-7 (5-7), 7-6 (7-2), 5-7, 6-0 என 5 செட்களில் கடுமையாகப் போராடி அமெரிக்காவின் டாமி பால் சவாலை முறியடித்தார். இப்போட்டி 4 மணி, 23 நிமிடத்துக்கு நீடித்தது. இங்கிலாந்தின் ஆண்டி மர்ரேவுடன் மோதிய மேட்டியோ பெரட்டினி (இத்தாலி) 6-4, 6-4, 6-7 (1-7), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.