யுஎஸ் ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் செரீனா டான்காவுடன் மோதல்

நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் அமெரிக்காவின் நியூயார்க்கில் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன்களான ரஷ்யாவின் மெட்வெடேவ், இங்கிலாந்தின் எம்மா ராடுகானு உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் முதல் சுற்றில் யார், யாருடன் மோதுவதை என்பதை தீர்மானிக்கும் குலுக்கல் (டிரா) நடந்தது.

இதில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியுடன் மோதுகிறார். அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், மொண்டெனேகுரோவின் டான்கா கோவினிக்குடன் மோத உள்ளார். இந்த தொடருடன் செரீனா டென்னிசில் இருந்து ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் சுற்றில் அவர் வெற்றி பெற்றால் 2வது சுற்றில் 2ம் நிலை வீராங்கனையான எஸ்டோனியாவின் அனெட் கொண்டவீட்டுடன் மோதவேண்டி இருக்கும்.

சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக்-ஜெர்மனியின் ஆண்ட்ரியா பெட்கோவிச், நடப்பு சாம்பியன் எம்மா ராடுகானு- பிரான்சின் அலிஸ் கார்டென்ட், ஜப்பானின் நவோமி ஒசாகா-அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ், கிரீசின் மரியா சக்கரி-ஜெர்மனியின் தட்ஜானாமரியா மோதுகின்றனர். ஆடவர் ஒற்றையரில் ஸ்பெயினின் நடால் -ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகாடா, மெட்வெடேவ்-அமெரிக்காவின் ஸ்டீபன் கோஸ்லோவ்வுடன் மோதுகின்றனர்.

ஆடவர் ஒற்றையரில் முன்னணி வீரரான செர்பியாவின் ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: