நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் பைனலில் ஹுர்கஸ் புஸ்டா: ஹடாட் மயா முன்னேற்றம்

மான்ட்ரியல்: நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயின் வீரர் பாவ்லோ கரெனோ புஸ்டாவுடன் போலந்தின் ஹூபர்ட் ஹுர்கஸ் மோதுகிறார். கனடாவில் நடைபெறும் இந்த தொடரின் ஏடிபி ஆண்கள் பிரிவு ஆட்டங்கள் மான்ட்ரியல் நகரிலும், டபுள்யுடிஏ மகளிர் பிரிவு ஆட்டங்கள் டொரன்டோ  நகரிலும் நடக்கின்றன. ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில்  நார்வே வீரர்கேஸ்பர் ரூடுடன் (7வது ரேங்க்) மோதிய ஹுர்கஸ் (10வது ரேங்க்) 5-7, 6-3, 6-2 என்ற  செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில்  கரெனோ புஸ்டா (23வது ரேங்க்) 7-5, 6-7 (7-9), 6-2 என்ற செட் கணக்கில்  பிரிட்டன் வீரர் டேனியர் இவான்ஸை (39வது ரேங்க்) வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மோதினர். விறுவிறுப்பான இப்போட்டி  2மணி, 58 நிமிடங்களுக்கு நீடித்தது.

புஸ்டா (31 வயது) முதல் முறையாக ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடரின் பைனலுக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பைனலில் ஹுர்கஸ் - புஸ்டா மோதுகின்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில்   ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் (15வது ரேங்க்)  2 மணி, 12 நிமிடங்களில்   2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவை (7வது ரேங்க்)  வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தார். மற்றொரு அரையிறுதியில் பிரேசில் வீராங்னை பீட்ரிஸ் ஹடாட் மயா (24வது ரேங்க்) 6-4, 7-6 (9-7) என்ற நேர் செட்களில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை (7வது ரேங்க்) வீழ்த்தி முதல் முறையாக டபிள்யூடிஏ 1000 சர்வதேச டென்னிஸ் தொடரின் பைனலுக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் ஹாலெப் - மயா பலப்பரீட்சை நடத்துகின்றனர். மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் களமிறங்கிய இந்தியாவின் சானியா மிர்சா - மேடிசன் கீஸ் (அமெரிக்கா) ஜோடி 5-7, 5-7 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் கோகோ காப் - ஜெசிகா பெகுலா இணையிடம் போராடி தோற்றது.

Related Stories: