சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் கடந்த 7 நாட்கள் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை: போதை பொருட்கள் வைத்திருப்பு, விற்பனை தொடர்பாக 41 பேர் கைது

சென்னை: சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் கடந்த 7 நாட்கள் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 5 பெண்கள் உட்பட 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 39.3 கிலோ கஞ்சா, 500 கிராம் மெத்தம்பெட்டமைன், 950 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 9 செல்போன்கள், ரூ.1,23,000, 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

இதில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 29.07.2022 முதல் 04.08.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 பெண்கள் உட்பட 41 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்  

மேலும் 39.3 கிலோ கஞ்சா, 500 கிராம் மெத்தம்பெட்டமைன், 950 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 9 செல்போன்கள், ரொக்கம் ரூ.1,23,000, 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இதில் குறிப்பிடும்படியாக B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர்  கடந்த 30.07.2022 அன்று பிராட்வே, தம்பு செட்டி தெரு மற்றும் மண்ணடி தெரு சந்திப்பில் கண்காணித்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்களை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.

சந்தேகத்தின்பேரில், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், போதைப் பொருள் கடத்தி வந்த 1.வெங்கடேஷ் வ/41, த/பெ.சின்னசாமி, வரலட்சுமி நகர் 2வது மெயின் ரோடு, மதுரவாயல், சென்னை, 2.சிவசந்திரன், வ/42, த/பெ.சண்டிவீரன், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, 3வது தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 500 கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமைன் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

இதே போல, F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (04.08.2022) மாலை, சிந்தாதிரிப்பேட்டை, மே தின பூங்கா அருகில் 2 இருசக்கர வாகனங்களில் சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் கடத்தி வந்த 1.அல்ஜமீர், வ/27, த/பெ.அபிபுல்லா, பச்சையப்பன் தெரு, எல்லிஸ் ரோடு, திருவல்லிக்கேணி, 2.அஜித், வ/22, த/பெ.கோவிந்தராஜ், பெரிய தெரு, கணபதி தெரு, திருவல்லிக்கேணி ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 600 நைட்ரவிட் உடல்வலி நிவாரண மாத்திரைகள், 2 இருசக்கர வாகனங்கள், 2 செல்போன்கள் மற்றும் பணம் ரூ.20,000/- பறிமுதல் செய்யப்பட்டது.

K-5 பெரவள்ளூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் கடந்த  01.08.2022 அன்று லோகோ ஸ்கீம் சாலை, லோகோ ரயில் நிலைய பாலம் அருகே கண்காணித்தபோது, அங்கு சந்தேகப்படும்படி பைகளுடன் நின்றிருந்த 3 நபர்களை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் பெருமளவு கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், மேற்படி இடத்தில் கஞ்சா வைத்திருந்த 1.அர்ஜுன்தாஸ், வ/35, த/பெ.பாதல்தாஸ், பஜனை கோயில் தெரு, மண்ணூர்பேட்டை, அம்பத்தூர் எஸ்டேட், சென்னை, 2.கிஷோர் பீர், வ/35, த/பெ.பிலிமோன், கஜபதி மாவட்டம், ஒடிசா மாநிலம், 3.மண்டேல் பீர், வ/25, த/பெ.காசி பீர், கீர்த்திசங் கிராமம், கஜபதி மாவட்டம், ஒடிசா மாநிலம் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20.4 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    

J-13 தரமணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர்  கடந்த 31.07.2022 கொட்டிவாக்கம், பழைய மகாபலிபுரம் சாலை, YMCA அருகே நடந்து வந்த 3 நபர்களை நிறுத்தி விசாரணை செய்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    

அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா எடுத்து வந்த 1.அபுஜாபர், வ/28, த/பெ.அப்துல் பரக், கத்தாலியா, திரிபுரா, 2.அக்தர் மியா, வ/23, த/பெ.சமல் மியா, சோனமுராநகர், மேற்கு திரிபுரா ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் 16 வயது இளஞ்சிறார் ஒருவரும் பிடிபட்டார். அவர்களிடமிருந்து 5 கிலோ எடை கொண்ட கஞ்சா  பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (04.08.2022) திருவல்லிக்கேணி, பெல்ஸ் சாலை, கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை எதரில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வைஷ்ணவி, பெ/வ.21, த/பெ.பொன்னன், T.H. ரோடு, ஐஸ் அவுஸ், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.3 கிலோ கஞ்சா மற்றும் பணம் ரூ.1,03,000/- பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: