விம்பிள்டன் டென்னிஸ் 34 வயது மரியா முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி!

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, 34 வயது வீராங்கனை மரியா டட்ஜனா முதல் முறையாக தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் சக ஜெர்மனி வீராங்கனை ஜூலி நியமியருடன் (22 வயது, 97வது ரேங்க்) நேற்று மோதிய மரியா டட்ஜனா (103வது ரேங்க்) 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடி நியமிரின் சர்வீஸ் ஆட்டங்களை எளிதாக முறியடித்த மரியா 6-2 என கைப்பற்ற, சமநிலை ஏற்பட்டது.

இதையடுத்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. அதில் பதற்றமின்றி விளையாடி 4-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்திய மரியா, முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் அரையிறுதியில் விளையாட தகுதி பெற்றார். 34+ வயதில் இந்த சாதனையை நிகழ்த்தும் 6வது வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு, ஓராண்டுக்கு முன் மீண்டும் டென்னிஸ் களத்துக்கு திரும்பிய மரியா கடந்த மார்ச் மாதம் வரை டாப் 250 ரேங்க்கில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சானியா ஜோடி முன்னேற்றம்: கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா - மேட் பாவிச் (குரோஷியா) ஜோடி 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் ஜான் பியர்ஸ் (ஆஸி.) - டப்ரோவ்ஸ்கி (கனடா) ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

Related Stories: