விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் தோல்வியை தழுவினார் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்

லண்டன்: ஓராண்டிற்கு பிறகு டென்னிசுக்கு திரும்பி இருக்கும் பிரபல அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விம்பிள்டனில் முதல் சுற்றிலேயே தோல்வியை தழுவி  வெளியேறினார். தற்போது 40 வயதாகும் செரீனா கடந்த ஆண்டு இதே விம்பிள்டனில் காயம் அடைந்ததால், பாதியில் விலகி அதுமுதல் டென்னிஸ் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்தார். இந்நிலையில், இழந்த பெருமையை ஓராண்டிற்கு பிறகு மீண்டும் விம்பிள்டனிலேயே கைப்பற்றும் நோக்கில் களமிறங்கினார். பிரான்ஸ் நாட்டின் ஹார்மோனி டானை முதல் சுற்றில் செரீனா எதிர்கொண்டார்.

ஜாம்பவானின் ஆட்டத்தை காண சென்டர்கோட்டில் ரசிகர்கூட்டம் களைகட்டி இருந்தது. ஆனால் செரீனாவின் வழக்கமான அதிரடியை காண முடியவில்லை. முன்பை காட்டிலும் சற்று பருத்து காணப்பட்ட செரீனா அங்குமிங்குமாக ஓடி, பந்தை அடைய மிகவும் கஷ்டப்பட்டார். இதனை சாதகமாகிக்கொண்ட டான், 7-5,1-6, 7-6 என்ற கணக்கில் செரீனாவை போராடி வென்று அரங்கை அதிர வைத்தார். செரீனாவை வீழ்த்திய பிரான்சின் டான் வெற்றிக்கு பிறகு பேசியபோது, சூப்பர் ஸ்டாருக்கு எதிராக ஒரு கேமையாவது வெல்ல முடியுமா என்று சந்தேகத்தினுடையே ஒவ்வொரு நாளையும் கழித்ததாக கூறினார்.

வெற்றியை நம்ப முடியவில்லை என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இந்த தோல்வியால் செரீனாவின் 24-வது சாதனை கிராண்ட்ஸ்லாம் பட்ட கனவு தகர்ந்தது. கடந்த முறையும் முதல் சுற்றுடன் செரீனா வெளியேறியது நினைவுகூறத்தக்கது. ஆடவருக்கான முக்கிய போட்டி ஒன்றில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியை தழுவி நடையை காட்டினார். தர நிலையில் 6ம் இடத்தை பிடித்திருந்த அலிசியாமே சர்வண்ட் வாலி ஆட்டத்தின் பிரபலமான பிரான்சின் மேக்சிம் கிரெஸ்ஸியை எதிர்கொண்டார்.

4 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கண்கவர் ஆட்டத்தில் கிரெஸ்லி 6-7, 6-4, 7-6, 7-6 என்று கடும் போராட்டத்திற்கு பிறகு அலிசியாமேவை வீழ்த்தி ஆர்ப்பரித்தார். தோல்வியுற்ற அலிசியாமே கடந்த முறை காலிறுதி வரை முன்னேறியவர். ஆடவருக்கான மற்றொரு முக்கிய ஆட்டத்தில் கிரேக்கத்தின் ஸ்டெஃபனஸ் தகுதி போட்டி மூலமாக முன்னேறிய சுவிஸ் நாட்டின் அலெக்ஸ்சாண்டர் ரிட்சர்டைரை எதிர்கொண்டார். ரசிகர்களுக்கு விருந்தளித்த ஆட்டத்தில் ஸ்டெஃபனஸ் 7-6, 6-3, 5-7, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2ம் சுற்றில் நுழைந்தார்.

Related Stories: