யாஷ் துபே, சுபம் சர்மா சதங்களால் வலுவான நிலையில் மபி

பெங்களூர்: மத்திய பிரதேசம்(மபி)-மும்பை அணிகள் மோதும் ரஞ்சிக் கோப்பை இறுதி ஆட்டம் பெங்களூரில் நடக்கிறது. முதலில் விளையாடிய மும்பை முதல் இன்னிங்சில் 127.4ஓவரில் 374ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய மபி  2வது நாள் நாள் ஆட்ட நேர முடிவில்  41ஓவருக்கு ஒரு விக்கெட் இழந்து 123ரன் எடுத்தது. களத்தில் இருந்த யாஷ் துபே 44*, சுபம் சர்மா 41*ரன்னுடன் 3வது நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். அவர்களை பிரிக்க மும்பை மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.

பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி அடுத்தடுத்து சதங்கள் விளாசி அசத்தியது.. இருவரும் 2வது விக்கெட்டுக்கு 222ரன் வெளுத்தனர்.  சுபம் 116(15பவுண்டரி, 1சிக்சர்) ரன் விளாசினார். தொடர்ந்து 133ரன் குவித்த யாஷ் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஜத் பட்டிதாரும் அரைசதம் எடுத்தார். அதனையடுத்து 3வது நாள் ஆட்ட நேர முடிவில் மபி 123ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 368ரன் குவித்தது.

இப்போது 6 ரன்கள் பின்தங்கி இருந்தாலும் கைவசம் இன்னும் 7 விக்கெட்கள் இருக்கின்றன. அதனால் மபி முதல் இன்னிங்சில் மும்பையை எளிதில் முந்துவதுடன் மேலும் வலுவான நிலையை எட்டும் வாய்ப்புகள் அதிகம். எனவே களத்தில் உள்ள மபி வீரர்கள் ரஜத் 67*, கேப்டன் ஆதித்யா 11* ரன்னுடன் 4வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர்வார்கள்.

Related Stories: