திருவில்லிபுத்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 12 நாட்டு வெடிகுண்டு பறிமுதல்: வாலிபர் கைது

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 12 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒருவர் கைதானார்.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே செம்பட்டையன்கால் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (23). இவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள், பன்றி இறைச்சியை மறைத்து வைத்திருப்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீசாருக்கு தகவல் அளித்து, வனத்துறையினர், போலீசார் செம்பட்டையன்கால் பகுதியில் சம்மந்தப்பட்ட வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்று சோதனை செய்தனர். அப்போது வேக வைத்த பன்றிக்கறி, 12 நாட்டு வெடிகுண்டுகள், வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து நாட்டு வெடிகுண்டுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த, வெடிகுண்டு தடுப்பு போலீசார் வரவழைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டில் இருந்த கார்த்திக்ராஜாவை, திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். இவர் மீது வனவிலங்குகளை வேட்டையாடியதாக சில வழக்குகள் உள்ளன. வீட்டில் பன்றிக்கறி இருந்ததால், பன்றியை எங்கு வேட்டையாடினார் என விசாரித்து வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்த நாட்டு வெடிகுண்டுகள், வனத்துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவைகளை எஸ்பி மனோகர் பார்வையிட்டார். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.வனத்துறை ரேஞ்சர் கார்த்திக், வனத்துறை பாரஸ்டர் பாரதி ஆகியோர், கார்த்திக்ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: