பட்டினப்பாக்கம் கடற்கரையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உட்பட 2 கற்சிலைகள் மீட்பு: கடத்தல் சிலைகளா என போலீசார் விசாரணை

சென்னை: பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரை ஒதுங்கிய பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உட்பட 2 கற்சிலைகளை போலீசார் மீட்டு மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் நேற்று மாலை அப்பகுதி சிறுவர்கள் கடலில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையோரம் 2 கற்சிலைகள் கிடப்பதை சிறுவர்கள் பார்த்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பட்டினப்பாக்கம் போலீசாரிடம் சிறுவர்கள் சிலைகள் குறித்து தகவல் அளித்தனர்.

அதன்படி போலீசார் விரைந்து வந்து கடற்கரையோரம் இருந்த 2 கற்சிலைகளை மீட்டு ஆய்வு செய்தனர். அப்போது பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை, தவம் இருக்கும் முனிவர் சிலை என தெரியவந்தது. பின்னர் இரண்டு சிலைகளையும் போலீசார் மீட்டு மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், மீட்கப்பட்ட 2 சிலைகளும் பழமைவாய்ந்த கற்சிலைகள் என்பதால், சிலை கடத்தல் கும்பல் ஏதேனும் துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்த பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு கொண்டு வந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர எந்தவித தொடர்பும் இல்லாமல் பட்டினப்பாக்கம் கடற்கரையில் இரண்டு சிலைகள் மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மீனவர்களிடமும் போலீசார் சிலைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் அரிய வகை சிலைகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: