பிரஸல்ஸ்: ஹாக்கி புரோ லீக் தொடரில் இந்திய ஆண்கள், மகளிர் அணிகள் மீண்டும் பெல்ஜியம் அணிகளுடன் மோதும் ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.உலகின் முன்னணி அணிகள் பங்கேற்கும் எப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் தொடரில், மகளிருக்கான தொடர் கடந்த ஆண்டு அக்.13ம் தேதியும், ஆண்களுக்கான தொடர் அக்.16ம் தேதியும் தொடங்கின. ஆண்கள் பிரிவில் இந்தியா, நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, அர்ஜென்டினா, ஸ்பெயின், பிரான்ஸ், தென் ஆப்ரிக்கா இடம் பெற்றுள்ளன.இந்தியா இதுவரை 12 ஆட்டங்களில் 8 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 27 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது. நெதர்லாந்து 10 ஆட்டங்களில் 28 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பெல்ஜியம் 12 ஆட்டங்களில் 27 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன.மகளிர் பிரிவில் இந்தியா, நெதர்லாந்து, அர்ஜென்டினா, ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, பெல்ஜியம், சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளன. இந்தியா இதுவரை 8 ஆட்டங்களில் 4 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன் 22 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது. அர்ஜென்டினா 14 ஆட்டங்களில் 38 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நெதர்லாந்து 12 ஆட்டங்களில் 26 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன.
