7வது வெற்றியுடன் விடைபெற்றது பஞ்சாப் கிங்ஸ்; அடுத்த சீசனில் சிறப்பாக செயல்படுவோம்: கேப்டன் மயங்க் அகர்வால் நம்பிக்கை

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 70வதுமற்றும் கடைசிலீக் போட்டியில் பஞ்சாப்கிங்ஸ்-சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன் எடுத்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 43(32பந்து), ரொமாரியோ ஷெப்பர்ட் 26 (15 பந்து), வாஷிங்டன் சுந்தர் 25 ரன் எடுத்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ஹர்ப்ரீத் பிரார், நாதன் எல்லிஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய பஞ்சாப் 15.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. லிவிங்ஸ்டன் நாட்அவுட்டாக 22 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 49, தவான் 39, பேர்ஸ்டோ 23 ரன் எடுத்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் பசல்ஹக் பாரூக்கி 2 விக்கெட் வீழ்த்தினார். ஹர்ப்ரீத் பிரார் ஆட்டநாயகன் விருது பெற்றார். பஞ்சாப் 7 வெற்றியுடன் 6வது இடத்திற்கு முன்னேறிய திருப்தியுடன் விடைபெற்றது. ஐதராபாத் 8வது தோல்வியுடன் 8வது இடத்துடன் திருப்தி அடைந்தது.

வெற்றிக்கு பிறகு பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் கூறுகையில், எங்களிடம் நிறைய சாதகமான அம்சங்கள் உள்ளன. லிவிங்ஸ்டோன் அற்புதமாக ஆடினார். தவானும் கை கொடுத்தார். எங்களால் அடுத்தடுத்து வெற்றிகளை தக்கவைக்க முடியவில்லை. இப்போட்டியில் ஆடியது போன்ற அணுகுமுறையை கடைபிடித்தால், அடுத்த சீசனில் சிறப்பாக விளையாட முடியும். எங்களால் முடிந்தவரை சிறந்த விஷயங்களைச் செயல்படுத்தினோம். ஐபிஎல் போட்டிக்குப் பிறகு நிறைய விஷயங்களைப் பற்றி விவாதிப்போம், என்றார்.

ஐதராபாத் கேப்டன் புவனேஸ்வர்குமார் கூறுகையில், கேப்டனாக செயல்பட்டது நல்ல உணர்வு. ஆனால் வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் பீல்டிங் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். நாங்கள் ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். சீசனின் முதல் பாதி பிரமாதமாக இருந்தது. இரண்டாவது பாதியில் நாங்கள் ஒரு அணியாக நன்றாக வரவில்லை. போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால், அனைத்து துறைகளிலும் சிறப்பாக வர வேண்டும். அடுத்த ஆண்டு வலுவாக திரும்ப வேண்டும். பல பாசிட்டிவ் விஷயங்கள் உள்ளன.

அதில் உம்ரானும் ஒருவர். அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதியை நம்மால் மறக்க முடியாது, என்றார். லீக் சுற்று முடிந்த நிலையில் இன்று ஓய்வு நாளாகும். நாளை இறுதி போட்டிக்கான குவாலிபயர் 1 ஆட்டத்தில் பட்டியலில் முதல் 2 இடத்தில் உள்ள குஜராத்-ராஜஸ்தான் மோதுகிறது. இதில் வெற்றிபெறும் அணி பைனலுக்கு தகுதி பெறும்.

அர்ஷ்தீபுக்கு வாழ்த்து: ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஹர்ப்ரீத் பிரார் கூறுகையில், ‘‘இந்த தொடரில் நான் அதிக ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறேன். அதனால் கடைசி போட்டியில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். நெருக்கடியான சமயங்களில் நிதானமான, பதற்றமில்லாத அணுகுமுறையுடன் பந்து வீசினேன். மார்க்ரமின் விக்கெட்டை வீழ்த்தியது நல்ல திருப்பம்தான். அவர் ஸ்டெம்பிங் ஆனதும் மகிழ்ச்சியாக இருந்தது. அர்ஷ்தீப் இந்திய அணிக்காக ஆடப் போகிறார். அதில் எனக்கு மகிழ்ச்சி. எல்லோருடைய கனவும் ஒரு நாள் நாட்டுக்காக ஆட வேண்டும் என்பதுதான்’’ என்றார்.

1001 சிக்ஸ்: ஐபிஎல் வரலாற்றில் நடப்பு ஐபிஎல் சீசனில் தான் அதிக சிக்சர் அடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1001 சிக்சர், 1910 பவுண்டரிகள் அடிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக பட்லர் 37, லிவிங்ஸ்டன் 34 சிக்சர் அடித்துள்ளனர். பட்லர் 56, வார்னர் 52 பவுண்டரி அடித்துள்ளனர். இதற்கு முன் 2018ல் 872 சிக்சர்கள் அடிக்கப்பட்டிருந்தது.

Related Stories: