பஞ்சாபை வீழ்த்தி டெல்லி அபாரம் அணியின் வெற்றிக்கு உதவியதில் மிகுந்த மகிழ்ச்சி: ஆட்டநாயகன் ஷர்துல் தாகூர் நெகிழ்ச்சி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நேற்று நடந்த 64-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர் வார்னர், லிவிங்ஸ்டன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆனார். பின்னர் சர்பிரஸ்கான்-மிட்செல் மார்ஷ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில் சர்பிரஸ் கான் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் ரிஷப் பன்ட் (7), பவல் (2 ரன்) ஆகியோரையும் தனது சுழலால் அடுத்தடுத்து லிவிங்ஸ்டன் வீழ்த்தினார். ஆனால் மறுமுனையில் மார்ஷ் சிறப்பாக ஆடி 48 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் லிவிங்ஸ்டன், அர்ஷ்தீப் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பஞ்சாப் களமிறங்கியது. பேர்ஸ்டோவ் - தவான் ஆட்டத்தை நம்பிக்கையுடன் துவக்கினர். பேர்ஸ்டோவ் 28 ரன்னில் (15பந்து) அன்ரிச் நார்ட்ஜெ பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து களமிறங்கிய பனுகா ராஜபக்சே 4, தவான் 19 ரன் ஆகியோரை ஷர்துல் தாகூர் வெளியேற்றினார்.

தொடர்ந்து வந்த கேப்டன் மயங்க் அகர்வால் டக் அவுட்டானார்.

அதிரடி வீரர் லிவிங்ஸ்டன் 3 ரன், ஹார்ப்ரீத் பிரார் 1 ரன்னில் வெளியேறினர். மளமளவென விக்கெட் சரிந்தாலும் ஜிதேஷ் சர்மா சிறப்பாக ஆடி 44 ரன்கள் எடுத்தார். இறுதியில் பஞ்சாப் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியின் ஷர்துல் தாகூர் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்களை கைப்பற்றியதுடன் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 7-வது வெற்றி பெற்றுள்ள டெல்லி பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கிறது. வெற்றிக்கு பின் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் கூறுகையில், ‘‘இந்த தொடரில் ஒரு போட்டியில் வெற்றி, அடுத்த போட்டியில் தோல்வி என்ற நிலையில் ஆடிக் கொண்டிருந்தோம். ஒரு அணியாக அதை உணர்ந்து, மாற்ற விரும்பினோம். இந்த போட்டியில் அது சாத்தியமாகியிருக்கிறது. தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். பஞ்சாப் அணியின் பவுலர் லிவிங்ஸ்டன், வேகத்தில் மாறுபாடுகளை கொடுத்து எங்களை திணறடித்தார். ஆனால் அதுவும் விளையாட்டின் ஒரு அங்கம்தான். இந்தப் போட்டியில் வார்னர் ரன் ஏதும் எடுக்காமல் லிவிங்ஸ்டன் வீசிய பந்தில் ஆட்டமிழந்துவிட்டார். ஆனால் இந்த தொடரில் அவர் சிறப்பாக ஆடி வருகிறார்.

எங்களது பந்துவீச்சின் போது, குல்தீப் யாதவை கடைசி ஓவர்களில் வீசச் செய்வது என முடிவெடுத்திருந்தோம். ஆனால் 12வது ஓவருக்கு பின்னர் பனிப்பொழிவு இருந்ததால், ஸ்பின் பவுலிங்கில் பஞ்சாப் அணியின் பேட்ஸ் மேன்கள் அதிக ரன்களை எடுத்து விடும் வாய்ப்பு இருந்தது. அதனால் குல்தீப் யாதவை கடைசி ஓவர்களில் பந்து வீசச் செய்யவில்லை. அது எங்களுக்கு எதிர்பார்த்த பலனை அளித்தது. பிரித்வி ஷா குணமடைந்து வருகிறார். விரைவில் அவர் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறது’’ என்று தெரிவித்தார். ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஷர்துல்  தாகூர் கூறுகையில், ‘‘அணியின் இக்கட்டான சமயங்களில் திறமையாக ஆட வேண்டும்  என்று விரும்புகிறேன். கடைசியாக நாங்கள் ஆடிய இரண்டு போட்டிகள் எங்களுக்கு  மிகவும் முக்கியமானவை. இந்த 2 போட்டிகளிலும் திறமையாக ஆடி, அணியின்  வெற்றிக்கு உதவியிருக்கிறேன் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.  6வது ஓவர் முக்கியமானது. அந்த ஓவரில் ஷிகர் தவான் மற்றும் ராஜபக்சே என  அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். அதன் பின்னர் பஞ்சாப் அணி  வீரர்கள் ரன் எடுக்கும் வேகம் வெகுவாக குறைந்துவிட்டது. தொடர்ந்து  அக்சரும், குல்தீப் யாதவும் சிறப்பாக பந்துவீசினார்கள்’’ என்று  தெரிவித்தார்.

Related Stories: