தவான் அதிரடி: பஞ்சாப் ரன் குவிப்பு

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ஷிகர் தவானின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் அணி சவாலான இலக்கை நிர்ணயித்தது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா, முதலில் பந்துவீச முடிவு செய்தார். பஞ்சாப் தொடக்க வீரர்களாக கேப்டன் மயாங்க் அகர்வால், ஷிகர் தவான் களமிறங்கினர். அகர்வால் 18 ரன் எடுத்து தீக்‌ஷனா பந்துவீச்சில் துபே வசம் பிடிபட்டார். அடுத்து தவானுடன் பானுகா ராஜபக்ச இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாட, பஞ்சாப் ஸ்கோர் வேகம் எடுத்தது. தவான் 37 பந்தில் அரை சதம் அடித்தார்.

தவான் - பானுகா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 110 ரன் சேர்த்தது. பானுகா 42 ரன் (32 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பிராவோ வேகத்தில் துபே வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 7 பந்தில் 19 ரன் (1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். பேர்ஸ்டோ (6 ரன்) கடைசி பந்தில் ரன் அவுட்டாக, பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது. தவான் 88 ரன்னுடன் (59 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை பந்துவீச்சில் பிராவோ 2, தீக்‌ஷனா 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, 20 ஓவரில் 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது. ருதுராஜ் கெயிக்வாட், ராபின் உத்தப்பா இருவரும் துரத்தலை தொடங்கினர்.

ஐபிஎல் தொடரில் தனது 200வது போட்டியில் நேற்று விளையாடிய ஷிகர் தவான், அமர்க்களமாக விளையாடி அசத்தினார். ஐபிஎல் தொடரில் 6000 ரன் மைல்கல்லை கடந்த அவர், கோஹ்லிக்கு (6,402 ரன்) அடுத்து 2வது இடத்தில் உள்ளார்.

* ஐபிஎல் போட்டிகளில் தனது 46வது அரை சதத்தை பதிவு செய்தார் தவான். இந்திய வீரர்களில் இதுவே அதிகபட்சமாகும்.

Related Stories: