நாகாத்தம்மன் கோயிலில் 17ம் ஆண்டு தீ மிதி விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கத்தில் உள்ள ஓம்ஸ்ரீ தாய் நாகாத்தம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு 17ம் ஆண்டு தீ மிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை பக்தர்கள் 1008 பால் குடம் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இதன்பிறகு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் உடலில் ஊக்கு அணிந்தவாறு கிரேன் மூலமாக பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்து தீபாராதனை காட்டினர். பகல் 12 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு ஜோதி தரிசனம் நடைபெற்றது.

இதன்பிறகு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குளத்தில் புனித நீராடிவிட்டு, அலங்காரம் செய்துக் கொண்டும் உடலில் வேல், அம்பு அலகுகள் குத்திக்கொண்டும் ஊர்வலமாக சென்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தீக்குண்டத்தில் இறங்கி அம்மனை வழிபட்டனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், ‘’ஓம் சக்தி, ஓம் சக்தி’’ என பக்தி பரவசத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதன்பிறகு உற்சவர் அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு திருவீதிஉலா வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: