திருப்பதி கோதண்டராம சுவாமி கோயில் பிரமோற்சவ நிறைவு நாளில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி-திரளான பக்தர்கள் புனித நீராடினர்

திருமலை :  திருப்பதி கோதண்டராம சுவாமி கோயில் பிரமோற்சவ நிறைவு நாளில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்ேகற்று புனித நீராடினர்.

திருப்பதி கோதண்டராம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 9 நாட்கள் பிரமோற்சவ விழா நடைபெறும்.இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்த பிரமோற்சவம் கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. பிரமோற்சவ நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதன்படி, பிரமோற்சவத்தின் 8ம் நாளான நேற்றுமுன்தினம் காலை ரத உற்சவம் நடந்தது.

இதில் கோதண்டராமர், சீதா லட்சுமணருடன் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதை தொடர்ந்து, மாலை ஊஞ்சல் சேவையும், இரவு குதிரை வாகனத்தில் கோதண்டராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இந்நிலையில், பிரமோற்சவத்தின் கடைசி நாளான நேற்று காலை சீதா ராமர் சமேத லட்சுமணர் பல்லக்கில் கபில தீர்த்தத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், வேணுகோபால சுவாமி சன்னதி அருகே கோயில் மண்டபத்தில் சுவாமி, தாயார் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.  இதில் சீதா, ராமர்,  லட்சுமணர் சமேத சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், நெய், பழச்சாறு  ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

 பின்னர், வேதமந்திரங்கள் முழங்க கபிலதீர்த்தத்தில் உள்ள தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.  

தொடர்ந்து, காலை 11.30 மணிக்கு கோவிந்தராஜ சுவாமி மேல்நிலைப்பள்ளி பிஆர் தோட்டத்துக்கு சுவாமி எடுத்துச் செல்லப்பட்டது.  மாலை 4 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு தீர்த்தக்கட்ட தெரு, கொட்டகொம்மாள தெரு, கொட்டவீதி வழியாக கோதண்டராமர் கோயிலை வந்தடைந்தனர்.இதில் ஏழுமலையான் கோயில் ஊழியர்கள், அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர், இரவு கொடியிறக்கத்துடன் பிரமோற்சவம் நிறைவடைந்தது.

Related Stories: