தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல் வழக்கு: டிஜிபி அலுவலகத்தில் தொழிலதிபர் வெங்கட சிவநாககுமார் புகார்..!!

சென்னை: தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள தொழிலதிபர்  வெங்கட சிவநாககுமார் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜேஷ் என்பவர் கடத்தி சொத்துக்களை அபகரித்து விட்டதாக புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையை  சேர்ந்த உதவி ஆணையர் சிவகுமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட 6 பேர் மற்றும் இந்து மகாஜன சபையை  சேர்ந்த கோடம்பாக்கம்  ஸ்ரீ மற்றும் வெங்கட சிவநாககுமார் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட வெங்கட சிவநாககுமார் தற்போது ஜாமீனில் வெளிவந்தார். ஜாமீனில் வெளிவந்த வெங்கட சிவநாககுமார், டிஜிபியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி ராஜேஷ் தான் எனவும், தன்னிடம் தொழில் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றி பணம் பறித்துச் சென்றதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மோதல் விவகாரத்தில் குறிப்பாக 2 ஐபிஎஸ் அதிகாரிகள் தன்னை வழக்கில் சேர்த்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி முறையாக விசாரிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அமைதியான முறையில் தொழில் செய்து வந்த தன்னை, ராஜேஷ் ஏமாற்றி ரூ.10கோடிக்கு மேல் பணம் பெற்று விட்டதாகவும், அந்த பணத்திற்காக அவர் எழுதி கொடுத்த சொத்தினை மீண்டும் அவரே பெறுவதற்கு முயற்சி செய்தபொழுது தான் இந்த வழக்கானது தன் மீது பதிவு செய்யப்பட்டது என குறிப்பிட்டிருந்தார். இப்புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் தன்னை துன்புறுத்துவதாகவும், இந்த வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் எனவும் வெங்கட சிவநாககுமார் புகார்மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஏற்கெனவே இந்த வழக்கில் 10 பேர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் 5 பேர் முன் ஜாமீன் பெற்றும், 2 பேர் கைதாகி ஜாமீனிலும் உள்ளனர். இந்நிலையில் உதவி ஆணையர் சிவகுமார், காவல் ஆய்வாளர் சரவணன், மற்றும் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் ஆகிய 3 பேரும் இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாகி வருகின்றனர்.               

Related Stories: