அசூர், பத்தாளப்பேட்டையில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: உடனே கொள்முதல் செய்ய அமைச்சர் உத்தரவு

திருவெறும்பூர்:  திருச்சி திருவெறும்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிரிடப்பட்டது. தற்போது அறுவடை துவங்கி உள்ளது. அசூர் நெல் கொள்முதல் நிலையத்தில் அசூர், தேனீர்பட்டி, பொய்கைகுடிபட்டி உள்ளிட்ட பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை கொள்முதல் செய்வதற்கு ஒரு இயந்திரம் போதவில்லை. இந்நிலையில் மேலும் ஒரு தூற்றும் இயந்திரம்  கொண்டுவரப்பட்டது. ஆனால் அதனை இயக்க ஆள் இல்லை. இதனால் நெல் குவியல் குவியலாக தேக்கம் அடைந்துள்ளது.

 இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் நெல் மூட்டைகள் நனைந்தது. நெல் குவியலை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. மோட்டார் மூலம் மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். எனவே  உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கியுள்ள நெல் முட்டைகளை கொள்முதல் செய்ய வழிவகை செய்வதோடு ஈரப்பதத்தின் அளவை அதிகரிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தகவலறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரிய நடவடிக்கை எடுப்பதாக தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

இதேபோல் பத்தாளப்பேட்டையில் 1700 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது சுமார் 1200 ஏக்கர் மட்டுமே அறுவடை செய்யப் பட்டுள்ளதாகவும், இன்னும் 500 ஏக்கருக்கு மேல் அறுவடை செய்யப்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் தேங்கி உள்ளது. எனவே நெல்லை கூடுதல் இயந்திரம் கொண்டு உடனடியாக போர்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Related Stories: