அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் இரண்டாம் நடைமேடை உயர்த்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் நடந்து வரும் இரண்டாம் நடைமேடை உயரம் உயர்த்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை ரயில் நிலையம் வழியாக விருதுநகர்- காரைக்குடி வரை தினசரி பயணிகள் ரயிலும், செங்கோட்டை- தாம்பரம் ரயில் வாரத்திற்கு மூன்று நாட்களும், செங்கோட்டை- எழும்பூர் ரயில் வாரத்திற்கு மூன்று நாட்களும் இயக்கப்படுகிறது.

மேலும் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி ரயில் வாரத்திற்கு இரண்டு நாட்களும், புதுச்சேரி- கன்னியாகுமாரி ரயில் வாரத்திற்கு ஒரு நாளும் இயக்கப்படுகிறது. தினசரி 200க்கும் மேற்பட்ட பயணிகள் அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில்களில் ஏறி இறங்கி செல்கின்றனர். இந்நிலையில் தாம்பரம்- செங்கோட்டை ரயில் விருதுநகர்- காரைக்குடி பயணிகள் ரயிலுடன் அருப்புக்கோட்டையில் கிராசிங் செய்கிறது. இதனால் தாம்பரம்- செங்கோட்டை ரயில் இரண்டாம் நடைமேடைக்கு வருகிறது.

இந்நிலையில் ரயில் நிலைய இரண்டாம் நடைமேடை மிகவும் தாழ்வாக இருப்பதால் பயணிகள் இறங்கி, ஏற மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி பயணிகள் தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இதன் காரணமாக தற்போத அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக இரண்டாம் நடைமேடை உயரம் கூட்டுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே விருதுநகரில் இருந்து மானாமதுரை வரை 65 கிமீ தூரத்திற்கு ரயில் தண்டவாளத்தில் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தண்டவாளத்தில் அழுத்தத்தை சமநிலைப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. இந்த பணிகள் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடப்பதாக ரயில்வே பொறியாளர் தெரிவித்தார்.

The post அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் இரண்டாம் நடைமேடை உயர்த்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: