காளியம்மன் கோயில் திருவிழா களைகட்டிய கழுமரம் ஏறும் போட்டியில் கலக்கிய இளைஞர்கள்


கோபால்பட்டி: சாணார்பட்டி அருகே, காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி கழுமரம் ஏறும் போட்டி நடைபெற்றது. சாணார்பட்டி அருகே உள்ள மடூர் கிராமத்தில் காளியம்மன், பகவதி அம்மன், முத்தாலம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கழுமரம் ஏறும் போட்டி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

இதற்காக 60 அடி உயர கழுமரம் கொண்டுவரப்பட்டு அதன் பட்டை உரிக்கப்பட்டது. பின்னர் அந்த மரத்தின் மீது சோற்றுக்கற்றாழை, எண்ணெய் ஆகிய வழுக்கும் திரவங்கள் பூசப்பட்டு கோயில் முன்புறமுள்ள மைதானத்தில் ஊன்றப்பட்டது. பெரிய கழுமரம் அருகே மூன்று சிறிய கழுமரங்களும் ஊன்றப்பட்டன. கழுமரம் ஏற முன்வந்தவர்கள் முதலில் சிறிய கழுமரங்களில் ஏற வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

இதையடுத்து பெரிய கழுமரத்திற்கு சிறப்பு ஆராதனை நடைபெற்று போட்டி தொடங்கியது. இதையடுத்து வாலிபர்கள் ஆர்வமுடன் ஒருவர் பின் ஒருவராக கழுமரத்தில் ஏறினர். இதில் பலர் மரத்திலிருந்து வழுக்கி கீழே விழுந்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாலிபர் ஒருவர் கழுமரத்தின் உச்சியில் ஏறி, அதில் கட்டப்பட்டிருந்த பரிசு பொருள் அடங்கிய முடிச்சை அவிழ்த்தார். அப்போது அங்கு கூடியிருந்த கிராம மக்கள் ஆர்ப்பரித்தனர்.

 

The post காளியம்மன் கோயில் திருவிழா களைகட்டிய கழுமரம் ஏறும் போட்டியில் கலக்கிய இளைஞர்கள் appeared first on Dinakaran.

Related Stories: